பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

240

அகநானூறு - நித்திலக் கோவை


நிலையாகும். அங்ஙனம் இருபாலும் சமனுற்ற நிலையிலே அறநெறி பேணியமைபற்றி இப்பெயர் பெற்றார் போலும். இந்நூற் செய்யுளுள் தலைவனைப் பிரிந்து வருந்தும் தலைவி, அவன் மலைச்சிகரங் கண்டு ஆற்றியிருத்தலான செய்தி கூறப்படுகின்றது.

காவன் முல்லைப் பூதனார் (391)

பூதனார் என்னும் இயற்பெயரினையுடைய இவர் காவன் முல்லைத் துறைபற்றிய செய்யுட்களை இயற்றுவதில் சிறப்புடையவராகத் திகழ்ந்தமை பற்றி இப்பெயர் பெற்றனர் எனலாம். சங்கத்தொகை நூற்களுள் இவர் பாடியவாக வருவன எட்டுச் செய்யுட்கள் ஆம். பிரிவிடை வற்புறுத்துந் தோழிக்குத் தலைமகள் சொல்வதாக அமைந்த இந்நூற் செய்யுளில், 'யானைதன் வாய்நிறை கொண்டவலிதேம்பு தடக்கை குன்றுபுகு பாம்பிற் றோன்றும்' என அழகாகக் கூறியுள்ளனர். 'காவன் முல்லை என்றதால், முல்லை நிலத்துக் காவல் பூண்டிருந்த ஒருவர்' என்ற நினைவும் எழலாம்.

குடவாயிற் கீரத்தனார் (315, 345, 366, 385)

தஞ்சை மாவட்டத்துக் கொரடாச்சேரிக்கு வடதிசையில் ஏழாவது கல்லிலே 'கொடவாசல்' என்ற பெயருடன் இந்நாளில் ஒர் ஊர் வழங்குகின்றது. இவ்வூரில் தோன்றிய புலவர் இவராவர். கழுமலப் பெரும்போரும்; சோழர் குடந்தைக் கண்ணே வைத்த பெருநிதியினைப் பற்றிய செய்தியும்; பெரும்பூட் சென்னி, பொறையன், நன்னன், எவ்வி, அத்தி, பழையன், புன்றுறை, வழுதி, கணையன், கட்டி ஆகியோர் பற்றிய செய்திகளும்; மற்றும் பலவும் இவராற் கூறப்பெற்றுள்ளன. 'பெரும் பெயர் வழுதி கூடல் அன்ன தன் அருங்கடிவியனகர்' (315), 'இளமழை தவழும் ஏழிற்குன்றம் (345) 'கள்ளர் களமர். கழனி உழவரோடு மாறெதிர்ந்து மயங்கி இருஞ்சேற் றள்ளல் எறிசெரு' (356), 'கைவல் யானைக் கடுந்தேர்ச் சோழர் காவிரிப் படப்பை உறந்தையன்ன பொன்னுடை நெடுநகர்’ என்றெல்லாம் சுவைபடக் கூறுவனவற்றை இந்நூலிற் காணலாம். மகட்போக்கிய செவிலித் தாய் சொல்லியது என்ற வகையிலே அமைந்த இவரது 385 ஆவது செய்யுள் மிகவும் உள்ளத்தை உருக்குவதாக அமைந்துள்ளது. 'பொன்னுடை நெடுநகர்ப் புரையோர் அயர, நன்மாண் விழவில் தகரம் மண்ணி ஆம்பல புணர்ப்பச் செல்லாள். தானமர் துணைவன் ஊக்க ஊங்கி, உள்ளாது கழிந்த முள்ளெயிற்றுத் துவர்வாய்ச் சிறுவன்கண்ணி சிலம்புகழிஇ, அறியாத் தேயத்தள் ஆகுதல் கொடிதே' என்று வருந்தும்போது (385), அவளுடன் சேர்ந்து நாமும் வருந்தத் தோன்றுகிறது.