பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 37



சொற்பொருள்: 1. கூழை = தலைமயிர். குறுநெறிக் கொண்டன குறுகிய நெறிப்பினை அடைந்தன; நெறிப்பு சுருள்தல். 2. சூழி மென்முகம் - உச்சியிடத்து மெல்லிய முகம்; பாடம் அணிந்த மென்முகமும் ஆம் 3. துணை சான்றனள் - தன்மையைப் பொருந்தினள். 4. நெருநை - நேற்றை, 8. சிலம்பும் கழியாள் சிலம்பும் கழித்திலளே. இது மணமாவதற்கு முற்படக் கன்னியர் மேற்கொள்ளுகின்ற சிலம்புகழி நோன்பினைத் தன் மகள் செய்யப் பெற்றிலளே என வருத்தமுற்றதாம். 9. ஒல்கி தளர்ந்து.10. குயின்று தொளைத்து.12 பளிங்கு பளிங்குக் கற்கள் 13. வறுநிலத்து வறட்சியுற்ற நிலத்து; வறணிலத்து எனவும் பாடம். 15. சேக்குவள் - தங்குவள். 18. சிறுகுடி - சிற்றுார்.

விளக்கம்: 'வறுசுனைக்கு ஒல்கிப் புறவுக் குயின்று உண்ட புன்காய், நெல்லிகோடை உதிர்த்த குவிகண் பசுங்காய், அறுநூற் பளிங்கின் துளை காசு கடுப்ப விளங்கும் என்ற, சிறந்த உவமைநயம் அறிந்து இன்புறற்பாலதாகும். புறவினால் துளைத்து உண்ணப்பட்ட நெல்லிக்காய்கள் சிதறி வீழ்ந்து கிடக்கும் காட்சி, நூலறுந்து சிதறிக் கிடக்கும் மணிகளைப் போன்று விளங்கின வென்க, புறக் குயின்றுண்ட காய்கள் அவ்வாறு கிடப்பதுபோல, எம் பெருமனைச் செல்வியும், அவன் பொய்யுரைக்கு மயங்கி யாருமற்றவளாய்த் தவிக்கின்றனளே? எனக் குறித்து வருந்தியதாகவும் கொள்க.

316. அறிந்தும் அறியார்!

பாடியவர்: ஒரம்போகியார். திணை: மருதம், துறை: தலைமகற்கு வாயில் நேர்ந்த தோழி தலைமகளை நெருங்கிச் சொல்லியது.

(தலைமகன், பரத்தை ஒருத்திபால் உறவுபூண்டு தன்னை மறந்து திரிதலால், வருத்தமுற்று வாடி இருந்தனள் மகனைப் பெற்றெடுத்திருக்கும் ஒரு தலைவி. பின்னர்த் தலைவன் மீண்டுதன் வீடு வரவும், அவளுடைய ஊடல் தணிந்தபாடில்லை. அப்போது,அவன் தலைவியின் தோழியினுடைய உதவியை நாடுகின்றான். அவளும் தலைவிபாற் சென்று ஊடல் தணிந்து கூடுதலைக் கைக்கொள்ளுமாறு அவளுக்கு எடுத்து உரைக் கின்றாள். இந்த முறையிலே அமைந்த செய்யுள் இது)

          துறைமீன் வழங்கும் பெருநீர்ப் பொய்கை
          அரிமலர் ஆம்பல் மேய்ந்த நெறிமருப்பு
          ஈர்ந்தண் எருமைச் சுவல்படு முதுபோத்துத்
          தூங்குசேற்று அள்ளல் துஞ்சிப் பொழுதுபடப்
          பைந்நின வராஅல் குறையப் பெயர்தந்து 5