பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் 47


நடுங்குஅயிர் போழ்ந்த கொடுஞ்சி நெடுந்தேர்
வண்டற் பாவை சிதைய வந்துநீ
தோள்புதிது உண்ட ஞான்றைச்
சூளும் பொய்யோ கடல்அறி கரியே?

உயர்ந்த அலைகளையுடைய கடற்பரப்பிலே சென்று, மீன் பிடிக்கும் படகினையுடையவரான தமையன்மார், விசைத்து வலையினை இழுத்துப் பிடித்துக்கொணர்ந்த ஆற்றலுடைய வலிய மீன்களைத், தழையணிந்த அல்குலை உடையவரான அவர்தம் செல்வமிக்க நங்கைமார், விழாக்கள் நிகழுகின்ற ஊர்த்தெருக்களிலே கொண்டு, ‘இன்ன விலை’ எனக் கூறி விற்கின்ற, கானற்சோலையிடத்தான சிற்றுார்களையுடைய, கடற்கரை நாட்டுத் தலைவனே!

நீலமலரினை ஒத்த அழகிய மையுண்ட கண்களையுடையவள் என் தோழி. அவள் துயரமும், அலருரைக்கும் வாயினரின் பேச்சும் நீங்குமாறு, நீ விரைந்துவந்து எமக்கு அருள்செய்க. அருள் செய்யாது பொய்த்தனை யானாலும்,

நெடிதான உப்பங்கழியினிடத்தே துழாவி மீன்பிடித்து உண்ணுந் தன்மையுடைய குறுகிய கால்களையுடைய அன்னப் பறவையானது, அடும்பங்கொடிகள் செறிந்துள்ள மணல் மேட்டினிடத்தே அமர்ந்து, தம் அழகிய சிறகினை உலர்த்திக் கொண்டிருக்கும் வளைந்த நிலையினையுடைய புன்னையின் தாதுகள் வீழ்ந்து அழகுசெய்திருக்கும்; அப்பெரிய துறையி னிடத்தே, நெகிழும் நுண்மணலைப் பிளந்துவரும் தேர் மொட்டினையுடைய நின் நெடிய தேரிலே, யாங்கள் புனைந்தாடிய வண்டற்பாவை சிதையுமாறு ஊர்ந்துவந்து, இவள் தோள்நலத்தினைப் புதுவதாக உண்ட அந்தச் சமயத்தில், கடல் தெய்வமே அறிகின்ற சான்றாக வைத்து உரைத்தனையே, அந்தச் சூளுரையும் பொய்தானோ? (அதனையேனும் கூறுவாயாக.)

சொற்பொருள்: 2. திமில் - மீன்பிடி படகு. 3. தழை -

தழையாடை 4. விழவு அயல்தல் - விழாக்கொண்டாடல், 8. துழைஇய - துழாவியுண்ட 9, அடும்பு - அடும்பங்கொடி 10. தடவு நிலை - வளைந்த நிலை: கிளைகள் தரையைத் தடவியிருக்கும் தன்மையுமாம்.11. அயிர்-நுண்மணல், கொடுஞ்சி - தேர்மொட்டு 12. வண்டற்பாவை - புனைந்து விளையாடுதற்கு அமைத்த பாவை.13 தோள் - தோள்நலம் 14. கடல் அறிகரி. கடல் தெய்வமே அறிகின்ற சான்று எனச் சான்றிடல். சூள் உறுதிமொழி; நின்னைப் பிரியேன்; விரைவில் மணப்பேன் எனவெல்லாம் கூறுவன.