பக்கம்:அகமும் புறமும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அகம் – அகத்தின் அடிப்படை • 11


இந்நிலை நீடிக்கையில் இவர்கள் தொடர்பைத் தலைவியுனுடன் ஓயாமல் காலங்கழிக்கும் தோழி மெல்ல அறிகிறாள். தலைவனும் தலைவியும் தம் இன்பமே பெரிதென்று வாழ்ந்து வருகின்றனர். ஆனால், இருவரும் உலகில் வாழ்கின்றவர் தாமே! எனவே, இவர்கள் இவ்வாறு கூடிப் பிரிவதால் சமுதாயத்தில் மற்றவர்கள் இவர்களைப் பற்றி யாது பேசுவர் என்பதைத் தலைவியும் தலைவனும் நினைக்க நேரமில்லாவிடினும், தோழி நினைத்துப்பார்க்கிறாள். அவள் தலைவனைப் பார்த்து விரைவில் மணஞ் செய்துகொள்ள வேண்டும் என்று கேட்கிறாள். இதுவும் குறிஞ்சித் திணையின்பாற் படும்.

திருமணம் செய்வது என்றால் தலைவனுக்குக் கையில் பொருள் வேண்டுமே! எனவே, தலைவியைப் பிரிந்து தலைவன் பொருள்தேடச் செல்கிறான். திருமணம் நிகழ்ந்த பின்னும் பொருள் தேடச் செல்வதுண்டு. இவ்வாறு தலைவன் பிரிந்து செல்வதையும் அதற்குரிய ஏற்பாடுகளையும் கூறுவது ‘பாலைத்திணை’ என்று இலக்கணங் கூறும்.

திருமணம் முடிந்து இல்லறம் நடத்தும் நாளில் தலைவன் பிரிந்து செல்வதும் உண்டு. அந்நிலையில் தலைவி தன் கடமைகளைச் செய்துகொண்டு வீட்டில் இருப்பாள். இதனை ‘முல்லைத் திணை’ என்பர்.

சென்ற தலைவன் குறித்த காலத்தில் மீளாவிடின், தலைவி மிகவும் வருந்துவாள். அவள் வருத்தம் அடக்கும் நிலைநீங்கி வாய்விட்டு அரற்றும் அளவிற்குச் செல்லுதலும் உண்டு. இவ்வாறு அரற்றுவதை ‘நெய்தல் திணை’ என்பர்.

பொருள் முதலியன தேடி மீண்டு வந்த தலைவன் வீட்டிலிருந்து இன்பமாகப் பொழுது போக்குகிறான். அதிக வேலை இல்லையாதலின், அவன் மனம் சும்மா இருப்பதில்லை, ஓரளவு சோம்பியுள்ள மனத்தில் ‘சாத்தான்’ குடி புகுகின்றான். எனவே, தலைவன் தவறான

2