பக்கம்:அகமும் புறமும்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

252 • அகமும் புறமும்


யார் தலைவன்?

எத்தகைய காரணங்களால் இத்தலைமைப் பதவி ஒருவனுக்குக் கிட்டியது? செல்வம் மிக்குள்ளவனே இத்தலைமைப் பதவிக்கு உரியவன் ஆயினன். இந்நிலை தோன்றுவதன் முன்னர் உடல் வலிவுடையவன் இப்பொறுப்பை ஏற்றுக்கொண்டிருந்திருப்பான். ஆனால், நாளடைவில் உடல் வன்மையுடைய பலரை வைத்து ஏவல் கொள்ளும் தகுதி வாய்ந்த ஒருவனே தலைவனாகத் தகுதி பெற்றிருப்பான். மக்கள் செய்யும் செயல்கள் அனைத்திற்கும் அடிப்படையில் இருப்பது ‘வயிறு’ ஒன்று அன்றோ? பசி தணிக்கும் செல்வம் உடையான் ஒருவன் பிறரை ஏவல் கொள்ளும் தன்மை பெற்றான் என்பதில் வியப்பென்ன? இன்றும் பணமுடையவர்களிடம் அறிவு நிரம்பியவர்கள் பலரும் ஏவல் செய்வது நாம் காணும் ஒன்றுதானே! ஆனால், அப்பழங்காலத்தில் எது செல்வமாகக் கருதப் பெற்றது? ஆதிமனிதன் காட்டில் வாழும் விலங்குகளைப் பிடித்துப் பழக்கித் தனக்கு உதவி புரிய வைத்துக் கொண்டான். அவ்வாறு அவன் கொண்ட பல விலங்குகளுள் மாடு முதலிடம் பெற்றது. பல காலம் வரையில் மாடு ஒன்றுதான் அவன் செல்வ நிலையைக் காட்டும் அறிகுறியாய் இருந்து வந்தது. மனிதனுக்கு உணவு தந்து அவனுக்குப் பொதி சுமக்கவும் பயன்படும் இவ்விலங்கு, வீட்டு விலங்குகளுள் முதலிடம் பெற்றது இயற்கைதானே? இத்தகைய மாடுகளை அதிகம் பெற்றவன் செல்வமுடையவனாகக் கருதப்பெற்றான். ‘மாடு’ என்ற தமிழ்ச் சொல்லுக்குச் ‘செல்வம்’ என்றே ஒரு பொருள் இன்றளவும் இருந்து வருகிறது. தமிழருக்கு மட்டும் மாடு செல்வமாய் இருந்தது என்பதல்லாமல், கிரேக்கருக்கும் அதுவே செல்வமாய் இருந்தது எனச் சரித நூல் வல்லார் கூறுவர். அம்மட்டோடு அல்லாமல் கிரேக்க மொழியில் முதல் எழுத்தாகிய ‘ஆல்ஃபா’ என்பதன் வரிவடிவம் மாட்டுக் கொம்பைப் பார்த்து எழுதப்பெற்றது