பக்கம்:அகமும் புறமும்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் கண்ட அரசன் • 253

என்றுங் கூறுவர். பழந்தமிழ் இலக்கியத்தில் காணப்பெறும் போர் முறையும் இக்கருத்தை வலியுறுத்துகிறது. ஒரு மன்னன் மாற்றானின்மேல் படை எடுப்பதாயின், முதன் முதலில் மாற்றான் பசுக்கூட்டங்களைக் கவர்வதையே தொழிலாகக் கொண்டான். இது வெட்சித் திணை என்று கூறப்பெறும். இது இலக்கிய வழக்காய் நின்றுவிடினும், ஆதிகாலத்தில் மன்னனெனக் கருதப் பெற்றவன் மாடாகிய செல்வத்தையே பெரிதும் நம்பியிருந்தான் என்பது வெள்ளிடை மலை.

வழிவழி அரசன்

பழந்தமிழ் இனத்தில் மாடுகளை நிரப்பப் பெற்றவனே மன்னனெனக் கருதப்பெற்றான் என்று கூறுவதில் இழுக்கு ஒன்றுமில்லை. பசுவுக்குக் ‘கோ’ என்றதொரு பெயரும் உண்டு. எனவே, பசுக்களை மிகுதியாக உடைமையின் அரசனாகக் கருதப்பெற்ற ஒருவன் எவ்வாறு வழங்கப் பெறுவான்? கோக்களை உடைமையின் ‘கோன்’ என்று கூறப்பெற்றான் அரசன். "கொற்றவர் தம் கோன் ஆகுவை‘ எனவரும் மதுரைக் காஞ்சிச் சொற்றொடர் இப்பொருளை வலியுறுத்தல் காண்க. இப்பசுக்கூட்டங்களை வைத்து வளர்க்கும் பொறுப்புடையார் ‘கோவலர்’ என்றே. பின்னர் வழங்கப் பெற்றனர். ஆதியில் கோக்களை நிரம்பப் பெற்றிருந்தமையின் அரசனெனக் கருதிப் போற்றப்பட்ட ஒருவன், நாளாவட்டத்தில் இவ்வரசச் செல்வத்தைப் பரம்பரைச் சொத்தாகப் பெற்றான் என்பதை அறிகிறோம். உலக முழுவதிலும் அரசச் செல்வம் பரம்பரை வழி வந்ததாகவே அறிகிறோம். கரிகாற் பெருவளத்தான் பிறப்பதற்கு முன்னரே அவன் தந்தை இறந்துபட்டதால் அவன் ‘தாய்’ வயிற்றிலிருந்து தாயம் எய்தினான் என்று பொருநராற்றுப் படை குறிக்கிறது. இதுகாறுங் கூறியவற்றை அறுதியிட்டுச் சொல்லத் தக்க சான்றுகள் இல்லையாயினும் இவ்வாறு-