பக்கம்:அகமும் புறமும்.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

300 • அகமும் புறமும்

அமர்ந்த பின்னர் இந்த வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிடுதலும் இன்று நாம் காணும் காட்சி. இக்காலத்து மக்கள் அனைவருமே இதில் தவறு ஒன்றும் இல்லை என்று நினைக்கின்றனர் போலும்! ஒரு கட்சியார் மட்டும் அல்லாமல் அனைவருமே இவ்வாறு சொல் ஒன்றும் செயல் ஒன்றுமாயிருத்தலின், ஒருவரும் இதைத் தவறாகக் கருதவில்லை. ஆனால், பொதுமக்களைப் பொறுத்தமட்டில் ஆட்சியாளரின் இந்தச் சொல், செயல் மாறுபாடு மன வருத்தத்தை உண்டாக்கத்தான் செய்யும்.

ஆழ்ந்த வருத்தம் உண்டாகுமாயின், நாளடைவில் அது ஆட்சியாளருக்குத் தீமையாய் முடியும். பொதுமக்களிடம் தோன்றிய இந்த வெறுப்புச் சில சந்தருப்பங்களில் உடனே பயன் தருவதும் உண்டு. இன்னும் சில சந்தருப்பங்களில் உடனே பயன் தராது. இவ்வாறு பயன் தராதபோது மக்கள் வெறுப்புக் கொள்ளவில்லை என்று ஆட்சியாளர் நினைத்து விடக் கூடாது. ஆட்சியில் இருப்பவர்களைவிடச் சிறந்த பண்புடைய கட்சி வேறு இன்மையால் மக்கள் தம் வெறுப்பைக் காட்டாமலும் இருத்தல் கூடும். சந்தருப்பம் வந்தபொழுது தவறாமல் வெறுப்பைக் காட்டிவிடுவர். அமெரிக்காவில் நெடுநாட்களாய் ஆட்சியில் இருந்த ‘டெமாகிராட்டிக்’ கட்சியார் சென்ற தேர்தலில் தோல்வி யடைந்தமைக்குரிய காரணங்களுள் இதுவும் ஒன்று. எனவே, ‘கூடுமான வரை செய்யக் கூடியவற்றைச் செய்கிறோம்’ என்று கூறுதலும், இயலாதவற்றை ‘இயலாது’ என்று கூறுதலும் நலத்தைத் தவறாமல் விளைக்கும். ஆவூர் மூலங்கிழார் என்ற புலவர் இதோ இக்கருத்தைக் கூறுகிறார்:

ஒல்லுவது ஒல்லும் என்றலும் யாவக்கும்
ஒல்லாது இல்என மறுத்தலும் இரண்டும்
ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே;
ஒல்லாது ஒல்லுக என்றலும் ஒல்லுவது