பக்கம்:அகமும் புறமும்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82 • அகமும் புறமும்

விருந்தினரைப் புறத்தே வைத்து உண்ணலாகாது எனக் கட்டளை இடுகிறார்.


விருந்து புறத்ததாத் தான் உண்டல் சாவா

மருந்துஎனினும் வேண்டற்பாற்று அன்று
(குறள்-82)

என்ற குறளை உற்று நோக்குக. சாவாமையைத் தரும் அமிழ்தமாயினும் விருந்தைப் புறத்தே வைத்து உண்ணற்க என்று பொருள் கூறுவதைக்காட்டிலும் திரு அரசன் சண்முகனார் கூறியதாகக் கூறும் உரை இன்னும் அழகாக அமைவதைக் காணலாம், ‘விருந்து புறத்ததாத் தான் உண்டல் சாவாம்’ என்று கூறுவாராம் அவர். விருந்தைப் புறத்தே வைத்துவிட்டு உண்ண வேண்டாவென்று கூறுவதைக்காட்டிலும், உண்டால் அது சாவைத் தவிர வேறு அன்று என்பதே இதன் பொருள். ‘உண்பது மருந்தாக இருந்தால் என் செய்வது? நோயுடையார் மட்டுமே உண்ண வேண்டிய மருந்தாயின் என்செய்வது?’ என்பாரை நோக்கி. ‘மருந்து எனினும், அவ்வாறு தனியே உண்டல் வேண்டற்பாற்று அன்று’ என்று கூறுவது எவ்வளவு ஆழமும் அழகும் உடையது! பிறருக்குச் சோறு கொடுத்து அதனால் வறுமை அடைந்தோர் உலகத்து இல்லை என்ற உண்மையைத் தெளிவுறத்தவே விருந்தோம்புபவனுடைய வாழ்க்கை தரித்திரத்தால் பாழாகாது என்று பின்னும் கூறுகிறார்.

பரந்த மனப்பான்மை

எதிர்மறை முகத்தான் அவன் தரித்திரத்தால் வாட மாட்டான் என்று கூறிய ஆசிரியர், அடுத்து உடன்பாட்டு முகமாகக் கூறத் தொடங்கி, விருந்து ஓம்புவான் என்றும் கூறினார்.கூடி வாழும் இயல்புடையவனாகிய மனிதன் விருந்தோம்பலின் மூலம் தனது இந்த இயல்பை வளர்த்துக் கொள்கிறான். மேலும், இவ்வுலகில் வாழத் தொடங்கிய