சுதேசமித்திரன் தனது 10.4.1923 தேதியிட்ட இதழில் ஒரு தலையங்கமே எழுதியிருந்தது. அதில் எழுதியிருந்தாவது :
“ருஷ்யா தேசத்தில் ஐந்து வருஷ காலமாக அதிகாரம் நடத்திவரும் போல்ஷிவிக்கர்கள் ஜனநாயகக் கொள்கைகளிலும், பொருளுரிமைக் கொள்கைகளிலும் வெகு உயர்ந்த நோக்கங்களைக் கொண்டவர்கள். ஐரோப்பாவிலுள்ள மற்ற வல்லரசுகளெல்லாம், பெரும் முதலாளிகளின் செல்வாக்கிற்கு உட்பட்டிருக்கின்றனர். ஐரோப்பாவில் மற்ற தேசங்களில் வெளியாகும் பத்திரிகைகள் விசேஷமாக முதலாளிகளுக்கு உட்பட்டதாக இருக்கின்றன. ஆனதால் அந்தப் பத்திரிகைகளில் ருஷ்யாவைப் பற்றி வரும் விஷயங்களெல்லாம் பாரபட்சமில்லாமல் எழுதப்பட்டனவென்று கொள்ள முடியாது. ருஷ்யா தேச மகா ஜனங்களோ போல்ஷிவிக்கர்களையே ஆதரித்து வந்திருக்கிறார்கள். இவ்விதம் ஐந்து வருஷ காலத்திற்கு மேலாகவே தேச மகா ஜனங்களுடைய நன்னம்பிக்கையைக் கவரக் கூடியவர்களை துர்க்குணம் நிரம்பியவ கள் என்று கருதக்காரணம் ஒன்றுமே இல்லை.”
இவ்வாறு எழுதிவிட்டு, போல்ஷிவிக்குகளுக்கு எதிராகக் கூறப்பட்ட பொய்ப் பிரசாரத்துக்குப் பதிலளிக்கும் முகமாக, சுதேசமித்திரன் அதே தலையங்கத்தின் இறுதியில் பின் வருமாறு எழுதியிருந்தது :
“அவர்கள் தத்துவம் சமத்துவம் சகோதர பாவம் இவைகளைத் தழுவியதாகவே இருக்கிறதென்று நினைக்க இடமிருக்கிறது. போல்ஷிவிக்கர்களுடைய பொருளுரிமைக் கொள்கைகள் தற்காலத்திய பெரிய முதலாளிகள் சிலருக்கு அல்லது பலருக்கு வேம்பாக இருக்கலாம். ஆனால் பசியால் ஆயிரக்கணக்கான ஜனங்கள் மடியும்போது மட்டுக்கு மிஞ்சிய பணம் படைத்த ஒரு சிலர் தங்கள் மடிநாய்களுக்குப் பாலும் தெளிதேனும் கலந்து விருந்திடும் கோரத்தை மாற்றி, எல்லாரும் பசியாற உண்ணக் கூடிய வழிகளைக் கண்டுபிடிக்க முயல்வது மேலான முயற்சி என்பதை எவரும் மறுக்க முடியாது. மத குருமார்கள் உபதேசிக்கும் சடங்கு நுட்பங் களைக் காட்டிலும், போல்ஷிவிக்கர்கள் பெரு முயற்சியே
20