பக்கம்:அசோகர் கதைகள்.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
இந்தப் பக்கம் பரிசீலிக்கப்பட்டது.
12
அசோகர் கதைகள்
 

"பெரிய அரண்மனை அதிகாரி! அரசரைப் பேட்டி காண வந்து விட்டார்! போடா! இல்லாவிட்டால் உதை விழும்" என்று அந்த தகர்க் காவலர்கள் எரிந்து விழுந்தார்கள்.

இளைஞன் துயரம் தோய்ந்த முகத்தோடு தலைநகரிலிருந்து திரும்பினான்.

வழியில் துறவி காட்டிய மடம் இருந்தது. அவரைப் பார்த்தாவது ஆறுதல் அடையலாம். முடிந்தால் மடத்துச் சோறு சிறிது கிடைக்குமா என்று பார்க்கலாம் என்ற எண்ணத்துடன் அவன் அந்த மடத்துக்குள் நுழைந்தான். அன்பு கனிந்த அதே வசீகரப் பார்வையோடு அத் துறவி அவனே வரவேற்றார். "தம்பி, அரசர் பெருமானைப் பார்த்தாயா? ஏன் இப்படிச் சோர்ந்து போயிருக்கிறாய்?" என்று குறுஞ்சிரிப்புடன் கேட்டார்.

அந்தக் குறுஞ்சிரிப்புக்குள்ளே குறும்பும் இருந்தது. அதை இளைஞன் கவனிக்கவில்லை.

"ஐயா, நீங்கள் சொன்னபடியேதான் ஆயிற்று. என்னை அரச வீதியில் செல்லக்கூட காவலர்கள் விடமாட்டேன் என்று தடுத்து விட்டார்கள். என்னைப் போன்ற ஏழை எளியவர்களுக்கு எட்டாத இடத்தில் கருணையுள்ள மன்னர்கள் இருந்து என்ன பயன்?" என்று உள்ளங் குமுறிப் பேசினான் இளைஞன்.

"தம்பீ, நீ பேசுவது சரியல்ல. மன்னர்கள் உன்னைப் போன்ற பிச்சைக்காரர்களைப் பார்ப்பது என்று ஆரம்பித்தால், பார்க்க வரும் பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமற் போய்விடும். சொல்லப்போனால், ஏதாவது உதவி பெறுவதற்காக எல்லோருமே பிச்சைக்காரர்