பக்கம்:அஞ்சலி.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92 லா. ச. ராமாமிருதம்

தொட்டுத் தொட்டுத் தடவி, கன்னத்தை அந்த இடத்தில் வெச்சு கண்ணீர் விடுகிறேன். என் வேதனையை நீங்கள் அறிய முடியுமோ?”

“நாம் பெற்றதால் மாத்திரம் நம் மகன் நமக்குச் சொந்தமாகிவிடமாட்டான். ஒரு வயதுக்குமேல், அவரவர் அவரவர்க்கே சொந்தமில்லை.”

“மறுபடியும் ஆரம்பிச்சுட்டேளோன்னோ உங்கள் பாஷையை? ஆ, அதென்ன சப்தம்?”

“ரீ...ங்...ங்...ங்!”

தந்தியின் நாதம்போல் ஒரு ஓசை எங்கிருந்தோ மெல்லியதாய்க் கிளம்பி பெரிதாய் வீங்கிக்கொண்டே நெருங்கிற்று.

“ரீ ...ங் ...ங் ...ங்!”

அந்த ஒசையின் கதியில் இருவர் கண்களும் வசியமாகி, அதைப் பின்பற்றிச் சுழன்றன.

ஒரு சுட்டு விரலளவுக்கு நீளமாய், பருமனாய் வண்டு முங்கி முங்கி, எழுந்து கூடத்தை வட்டமிட்டது. அதன் நிழல் கூடத்துச் சுவர்களில், வண்டைவிட வேகமாய்ச் சுழன்று பாய்ந்தது. திடீரென தளம்வரை ஒரே வேகத்தில் செங்குத்தாய் எழும்பிக் கூரையில் மோதுண்டு நேரே விளக்குச் சுடரில் வீழ்ந்தது. விளக்கு குப்பென்றுத அணைந்தது. எண்ணெயின் பொசுங்கல் நாற்றம் கிளம்பிற்று. கூடம் கும்மிருட்டில் மூழ்கியது.

கரும்பலகையில் இரும்பாணியால் கோடு கிழித்தாற் போல் ஒரு அமானுஷ்யமான கீறல் சப்தம் மாஞ்சியிடமிருந்து கிளம்பிற்று.

“தந்தி ஸார்...!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/102&oldid=1033438" இலிருந்து மீள்விக்கப்பட்டது