பக்கம்:அஞ்சலி.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102 லா. ச. ராமாமிருதம்

விளையின் பக்கத்துலே விளைஞ்ச களையே நான் களையலாம். ஆனால் அவன் நட்டதைக் கிள்ள நான் யாரு?”

“என்னம்மா சொல்லுது?”

“ஒண்ணுமில்லே...” பூரணி அசதியுடன் கண் மூடினாள். “அண்ணன் கிட்டே நான் சொன்னதைச் சொல்லு. நேரம் போவுது.

“ஆமாம்; நேரம் போவுது. எப்படிப் போவுது! துள்ளுது, ஆவுது, நீளுது, நிக்குது நிக்கிறத்துலேயே ஓடுது: ஒடறத்துலேயே நிக்குது. ஆனால் அள்ளுது.

“நேரத்துக்கு உருவம்னு இருந்தா, அது ஒர் ஆளா மாறி ரெண்டு பக்கத்துலேயும் இறக்கை முளைச்சு, நாம் மழை பேஞ்ச நாளிலே சேத்துலே கால் படாமே நாலஞ்சு கல்லை நடைபாதையிலே போட்டு அது மேலே முழங்காலுக்கு மேலே சேலையைத் தூக்கிப் புடிச்சுக்கிட்டுக் கல்லுக்குக் கல்லு தாவி போவல்லே, அதுமாதிரி தத்தி வந்து எதிரே நிக்குது. நின்னு கேக்குது.”

“வந்தூட்டேன் பூரணி ஆத்தா!”

“தெரியுது”

“ஒ...ஹோ? தெரியுதா?”

“தெரியாம என்ன? போட்டோக்கு ஆளை அனுப்பச் சொல்லிட்டேனே...”

“ஆமா, என்ன சொல்றே? குண்டுகட்டா கட்டித் தோளிலே போட்டுக்கிட்டு நடக்கவா? கையைப் பிடிச்சுக்கிட்டு என்னோடே குணமா வாரியா? நீ ஒண்ணும் வெக்கம் வெச்சுக்காதே ஆத்தா, நான் உன் மவன்மாதிரி.”

பூரணி கண்ணிற்குள் சிரித்துக்கொண்டாள்.

“அப்டீன்னா உன் தம்பி என்ன செய்யறான்?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/112&oldid=1033445" இலிருந்து மீள்விக்கப்பட்டது