பக்கம்:அஞ்சலி.pdf/127

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூரணி 117

சமையல் வூட்டுள்ளே கூட்டிக்கிட்டுப் போனாங்க. அங்கே இருட்டோரத்துலே ஒரு பானையைத் திறந்து என்னை அது உள்ளே கையை விட்டுப்பார்க்கச் சொன்னாங்க; உள்ளே புடவையிருந்திச்சு.

“சின்னப் பொண்னே, பூவாடையைத் தொட்டுக் கண்ணுலே ஒத்திக்கோ, இதுலே ரெண்டுபேர் இருக்காங்க. ஒண்னு பெரிய பொண்ணு, உனக்கு மூத்தாரு. இன்னொண்ணு எனக்கு ஒரு மகள் இருந்தது. கண்ணாலம் ஆவறத்துக்கு முன்னாலே பூட்டாள். அதுனாலே கன்னித் தெய்வம் ஒண்ணும் கல்லாட்டம் தாலி கட்டின தெய்வம் ஒண்னும், சேர்ந்து இந்த வீட்டைக் காக்கறாங்க. வருஷத்துக்கும் மறவாமே இவங்களை கும்பிட்டு வந்தா இந்த வீட்டுக்கு ஒரு குறைவுமில்லே. இவங்க ரெண்டுபேரும் இறந்துபோறப்போ, போற வயசில்லே. அதுனாலே இவங்க இறந்துட்ட மாதிரியே நான் நினைக்கல்லே. இங்கேயே இருந்துட்டுதான் இந்தக் குடும்பத்தைக் காத்து வராங்க. இவங்களை நீ மறக்காதே. பாரு நான் சொல்லுறேன், கவுளியடிக்குது.”

முதலியார் தன் மூத்த மனைவியை ஞாபகப்படுத்திப் பார்த்துக்கொண்டார். இத்தனை வருடங்கள் கழித்து அவள் உருவத்தை வருவித்துக் கொள்வதே சிரமமாய் இருந்தது. அவளைவிட மனதில் அழுத்தமாய்ப் பதிந்தது அந்தக் கலியாணத்தின் விமரிசைதான். தெருவையடைச்ச பந்தலும், அடுக்கடுக்காய் நவர்ந்த பச்சைராந்தல் விளக்கும், வண்டி வண்டியாய் உடைஞ்ச கலர் கோலி, சோடா புட்டியும், ஊர்வலத்துக்காக ‘பெஸலா’ உழக்குவாக்கத்திலேருந்து ஆள் வந்து ஜோடனை பண்ணின பூப்பல்லக்கும்......

எல்லாம் என்னத்துக்கு? யாருக்கு ஆச்சு?

சாந்திகூட கழியல்லே. கலியாணம் ஆகி ரெண்டு மாதத்தில் மூணுநாள் காயலில் இறந்துாட்டா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/127&oldid=1033451" இருந்து மீள்விக்கப்பட்டது