பக்கம்:அஞ்சலி.pdf/128

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118 லா ச. ராமாமிருதம்

ஏதோ அவள் இறந்து போனத்துக்கு புது மருமவப் புள்ளைதான் காரணம்போல், அந்த வீட்டு மனஸ்தாபமும், வீட்டுக்கு முதல் புள்ளேன்னு ஆசைமேல் அப்பன் செலவு செஞ்சு வைச்சுப்போன கடனும்தான் மிச்சம். இந்தக் கடனெல்லாம் அடைச்சு காலை ஊணித் தலை நிமிர்ந்து, இன்னொரு வீட்டுக்குப் போய் இன்னொரு பொண்ணைக் கேக்கறத்துக்குள்ளே நாலு வருசம் ஒடிப் போச்சு. அப்படியே பண்ணினாலும் இந்தக் கண்ணாலம் அந்தக் கண்ணாலம் மாதிரி செய்ய முடிஞ்சுதா? பாத்தியர் கண் மூடிக் கண் திறக்கறத்துக்குள்ளே, மூச்சுவிட்டு மூச்சு கூட்டுதுக்கு முன்னே, எத்தனை நாள், என்னென்னெல்லாம்! ஓடுது, ஓடுது, அது பாட்டுக்கு ஓடுது.

யாரோ மாடிப் படியேறி வாராங்க. மேல் மூச்சு வாங்குது.

யாரு? மூத்த மருமவதான் நிறைவயத்தைத் தூக்கிட்டு வரா, தூக்கமாட்டாமே. வந்து மாமியார் கையை எடுத்துத் தன் கண்ணுலே புதைச்சுக்கிட்டு விக்கி விக்கி அழுவறா!

“பாஞ்சாலி இதென்னாது?”

“அம்மா! அம்மா!” என்று கதறுவது தவிர பாஞ்சாலிக்கு வேறு வார்த்தைகள் எங்கே?

“என்ன அம்மே இது? சமாளி... ஆவாது.”

“அம்மா! அம்மா!”

ஆமா, பாஞ்சாலிக்கு அவதான் மாமியாரு, அவதான் ஆத்தாகூட. அப்பன் ஆத்தா ரெண்டு பேருமே பாஞ்சாலிக்கு இல்லை. எங்கேயோ மாமன் வீட்டில் வளர்ந்து வந்தா. மாமன் தருமத்துக்கு வளத்தேன்னு கூடவே காட்டி வந்தான். அது அத்தைக்கு ஆவல்லே புள்ளைக்குக் கட்டி, பொண்ணு ஆளாவறத்துக்குள்ளே அத்தை, வீட்டுக்குக் கூட்டி வந்தூட்டா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/128&oldid=1033452" இருந்து மீள்விக்கப்பட்டது