பக்கம்:அஞ்சலி.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126 லா, ச.ராமாமிருதம்

அப்போ சட்டுனு அவங்களுலே ஒரு ஆள் ஒதுங்கி நிக்கறான். நான் கையிலே சோத்தை ஏந்திட்டு நிக்கறேன். ஆனா அந்த ஆள் கை நீட்டி வாங்கல்லே. என்னையே கண் கொட்டாமல் பாத்துட்டு நிக்கறான், அவன் மொவத்தைப் பார்த்ததும் எனக்கு...”

“அம்மா! அம்மா!!”

காதண்டை பாஞ்சாலி கூப்பிட்டதும் பூரணி விழித்துக்கொண்டாள்.

“ஓ! நான் தூங்கிட்டேன் திடீர்னு—”

“அம்மா போட்டோக்காரு வந்திருக்காங்க.”

“வேணாம்னு சொல்லி அனுப்பிச்சிடு,”

“ஏம்மா! நீ சொல்லித்தானே வந்தாங்க—”

“ஆமா, அப்போ அப்படி நெனைச்சேன். இப்போ வேணாம்னு இருக்குது.”

“எங்க நினைப்புக்கு அம்மா ஒரு போட்டோ—”

“என்னைப் போட்டோ இருந்தாத்தான் நினைப்பீங்களா...அதுவும் போட்டோலே இருந்திச்சப் பிரகாரம் தான் நினைக்கணும். இப்படி என்னை ஒரு நாக்காலிலே சாத்தி வைச்சு சீக்காளியா சிங்காரிச்சு...! நான் நல்ல படியா உலாத்திட்டிருந்தபடி நெனைப்பிலே நினையுங்க போதும். எனக்குப் போட்டோ வேணாம். வந்தவங்களைப் போவச்சொல்லிடு.”

பாஞ்சாலி பெருமூச்சு விட்டுக்கொண்டு மெதுவாய்க் கீழே அடிமேல் அடிவைத்து இறங்கிச் சென்றாள்.

முதலியார் குன்றுமாதிரி அசைவற்று உட்கார்ந்தார். அவர்மேல் கொடிகூடக் கட்டிப் பறக்கவிடலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/136&oldid=1033456" இலிருந்து மீள்விக்கப்பட்டது