பக்கம்:அஞ்சலி.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142 லா.ச. ராமாமிருதம்

எப்போ நீ வருவே? எப்போ நீ வருவே? பொட்டு பொட்டு பொட்டு.

மாரியாத்தா! எப்படியானும் அவரைக் கொண்டு வந்து வீட்டோடு சேத்தூடு!

வீட்டுக்கு வீட்டுக்குப் படியேறி மடிலே பிச்சை வாங்கி, அந்தப் பிச்சரிசியைக் கஞ்சி காச்சி ஆயிரம் பேருக்குக் கரைச்சு ஊத்தறேன். ஆனா நீ மாத்திரம் என்னாண்டை அவரைக் கொணாந்து சேர்த்தூடு.

வீட்டை விட்டுப் போயிட்டியே. நான் என்னாத்தை உனக்கு அப்படி மனம் வெறுக்கும்படி சேஞ்சுட்டேன்? உன் சாப்பாட்டை ஒரு கொட்டைப்புளி தூக்கலா ஒரு உப்புக்கல் கொறைவா, ஒரு மணியரிசி வேவாமே ஆக்கிப் போட்டேனா? உனக்கில்லாமே எனக்கு ஏதாச்சும் மறைச்சு வெச்சுக்கிட்டேனா? என்னா துரோகத்தை என்னிடத்துலே கண்டுட்டு நீ ஓடிப்போயிட்டே? என் கனவுலயாவது வந்து சொல்லு. ஆமா, நமக்குப் பொறந்த மக்கள் தலைமேலே கையை வெச்ச ஆணையா நீ கணவுலியாவது வந்து சொல்லித்தான் ஆவணும்.

அந்த மொட்டைப் பண்டாரம் வந்தான், கண்ணை உருட்டிக்கிட்டு. மெறிகட்டையை என்னிக்கு என் வாசல்லே மெறிச்சானோ அன்னிக்கே என் குடும்பத்தையும் மெறிச்சூட்டான்.

பாவி! நஞ்சானுங் குஞ்சானுமா நடுவூட்டுலே விட்டுட்டுப் போயிட்டியே, எப்படி உனக்கு மனசு துணிஞ்சுது? சாமியைத் தேடிக்கிட்டு, சாமியார் பின்னாலே பூட்டான். நீ வாழ்வியாடா நீ? மனுசனா நீ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/152&oldid=1033466" இலிருந்து மீள்விக்கப்பட்டது