பக்கம்:அஞ்சலி.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

190 லா. ச. ராமாமிருதம்

“சின்னான் தோட்டத்தை இப்படியா வைத்திருந்தான்? இதென்ன இலைகூட அசையவில்லையே! அடேயப்பா, எப்படி புழுங்கறது! நான் குளிக்கப் போறேன்—”

ஒரு மெட்டை சீட்டியடித்துக்சொண்டு வெளியே சென்றாள்.

நான் ஜன்னலண்டை நின்று கொண்டிருந்தேன். நேரம் போவது தெரியவில்லை.

சின்னான் இறந்து நாலைந்து மாதங்களாகிவிட்டன. அவன் முடிவும் அவன் மனைவியின் முடிவும் என் கண் முன் நின்றது. சின்னானுக்கும் பொன்னிக்கும் மணமாகி ஒரு வருடமாகவில்லை. பொன்னி நிறைகர்ப்பிணி, அடுப்புக்குச் செத்தை பெருக்கப்போனவள், ஒரு பாழுங்கிணறில் தவறி விழுந்துவிட்டாள். கிணற்றில் ஜலங்கூட அவ்வளவு இல்லை.

அவளுடைய அபயக்குரல் கேட்டுத்தானோ, அல்லது அந்த விபரீதத்தின் உணர்ச்சி கன வேகத்தில் காற்று வழி பறந்து வந்து வயிற்றில் சுறிலென வைக்கும் நெருப்பின் பொறிதானோ— இன்னமும் நிச்சயப்படவிலலை. தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தவன் அப்படியே செம்மட்டியைப் போட்டுவிட்டு “பொன்னீ பொன்னீ” என்று கத்திக்கொண்டு ஓடினான். பார்த்தவர்களும் கேட்டவர்களும் சொன்னது இதுதான்.

இரண்டு பிணங்களையும் கிணற்றிலிருந்து ரொம்பவும் சிரமப்பட்டுத்தான் எடுக்க முடிந்தது. கிணற்றில் ஜலத்தின் ஆழம்கூட அதிகமில்லை. விஷக்காற்று இருவரையும் அமுக்கிவிட்டது.

இரு உடல்களையும் பிரிக்க முடியவில்லை. ஒன்றோடு ஒன்று பிண்ணிய தழுவலில் விறைத்துவிட்டன. ஒரே தடுக்கில் இரண்டையும் மயானத்துக்கு எடுத்துச் சென்றார்களாம். வழி பூரா வீதி பிதுங்கும் கூட்டமாம். பல நாட்களுக்கு இதே பேச்சு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/200&oldid=1033494" இலிருந்து மீள்விக்கப்பட்டது