பக்கம்:அஞ்சலி.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

198 லா. ச. ராமாமிருதம்

வீட்டுக்கு ஒரே பயிர். உன் வீட்டிலோ உனக்கு இரண்டு வளர்ந்த தங்கைகள், இரண்டு தம்பிகள் இருக்கிறார்கள். இத்தோடு உன் தாய் கையில் ஒரு குழந்தையை ஏந்திக் கொண்டிருக்கிறாள்.”

“நீ என் தாயாரைக் கேலி பண்ணவேண்டாம்—” என்றாள், சீற்றத்துடன்.

“நான் ஒருவரையுமே கேலி பண்ணவில்லை. நீ தாய்மையையே வெறுக்கும்போது, நீ வளர்ந்திருக்கும் கோளாறை நினைத்துத்தான் வருந்துகிறேன்.”

கொஞ்சநாழி இருவரும் மெளனமாயிருந்தோம். அவரவர் அவரவர் யோசனையில் ஆழ்ந்திருந்தோம்.

காயத்ரியின் தாயரைப்பற்றி மனமில்லாமல் நான் நினைத்துக்கொண்டிருந்தேன். மாதத்தில் இரண்டு மூன்று முறை பெண்ணைப் பார்க்கவருவாள். அதனால் மாத்திரம் ஒன்றும் மோசமாகிவிடாது. ஆனால் வரும் போதெல்லாம் அவள் பேசும் மாதிரியும் நடந்துகொள்ளும் ரீதியையும் பார்த்தால் அவள் பெண்ணை நான் உயிரோடு வைத்திருக்கிறேனா அல்லது கொன்றுவிட்டேனா என்று அவ்வப்போது உளவு கண்டுபோக வருவதுபோல் தோன்றும்.

தாயாரும் பெண்ணும் எப்போதும் ரகசியம் பேசிக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்குள் அவ்வளவு பொத்திவைக்கும் விஷயங்கள் என்ன இருக்குமோ? என்னைக் கண்டதும் பேச்சை நிறுத்திக்கொண்டு முகத்தைக்கூட சிரமப்பட்டு மாற்றிவைத்துக்கொள்வார்கள். முதல் இரண்டு மூன்றுமுறை எனக்கு வேடிக்கையாயிருந்தாலும், போகப் போக வெறுப்பைத்தான் விளைவித்தது. அவள் வந்தால் காயத்ரீகூட பச்சோந்தி மாதிரி நிறம்கூட மாறிவிடுவதுபோல் எனக்குத் தோன்றும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/208&oldid=1033501" இலிருந்து மீள்விக்கப்பட்டது