பக்கம்:அஞ்சலி.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காயத்ரீ 201

“காயத்ரீ, தயவுசெய்து ஜன்னல்களைத் திற.”

“மழையடிக்கிறது காது கேட்கிறதா?”

“பரவாயில்லை.”

“அறையில் தெப்பல் உத்ஸவம் கொண்டாட வேண்டியதுதான்.”

‘பரவாயில்லை.”

அவள் ஒரு கதவைத் திறந்ததுமே சாரல் ‘விர்’ரென்று வீசிக்கொண்டு என் முகத்தில் அறைந்தது.

“இப்போ திருப்தியாகி விட்டதா?”

“இல்லை, எல்லாக் கதவுகளையும் திறந்து விடு.”

காற்றும் மழையும் சீறிக்கொண்டு உள்ளே மோதின. என் நெஞ்சு...என் நெஞ்சு...சொக்காயை மார்ப்புறம் திறந்துகொண்டு கட்டிலில் கிடந்தேன்.

கீழுதடைத் திருகிக்கொண்டு ஆச்சரியத்துடன் என்னைப் பார்த்துக்கொண்டு நின்றாள்.

***

ஆஸ்பத்திரியின் கட்டிடம் உயர்ந்த மேட்டில் கம்பீரமாய் நிற்கிறது. ஆனால், அதன் தோற்றம் நெஞ்சில் தைரியத்தை ஊட்டுவதற்குப் பதிலாகச் சில்லிடத்தான் செய்கிறது.

காரின் பின் ஸீட்டில் காயத்ரி, மூடிய கண்களுடன் அவள் தாயின்மேல் சாய்ந்துகொண்டிருக்கிறாள். முகம் சுண்ணாம்பாய் வெளிரிட்டுவிட்டது. அவள் முகத்தின் பக்கத்தில், அவள் தாயின் முகம், திருஷ்டி கழிக்க வைத்த பொம்மைபோல் அருவருப்பாய் காட்சியளிக்கின்றது. பின்வரும் விபத்தின் முன் அறிகுறிபோல் அவள் முகபாவம் எப்பவும் என்னை அச்சுறுத்துகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/211&oldid=1033504" இலிருந்து மீள்விக்கப்பட்டது