பக்கம்:அஞ்சலி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12 லா. ச. ராமாமிருதம்

என் மாமாவுக்குச் சில சமயத்திலே கோபம் வரும். அவருக்குக் கோவம் வந்துட்டால் வாயிலே வராத வார்த்தையெல்லாம் சொல்லித் திட்டுவார். அப்போ உச்சி வெய்யிலில் ஜலம் கக்கலும் கரைசலுமா ஒடற நினைவு எனக்கு வரும். அவர் கண் சிவப்பு அடிவண்டல் மண் மாதிரி இருக்கும்.

“எனக்கு இன்னொரு சிநேகிதி இருந்தாள். கல்யாணமாகி மூணு மாசம்கூட வாழல்லே. குறைப்பட்டு ஆத்துக்குத் திரும்பி வந்துவிட்டாள். அவள் வந்த முதல் நாள் எனக்கு மறக்கவே மறக்காது. எதுத்தாத்திலேதான் இருந்தாள். ஜட்கா வண்டியிலேருந்து கீழேயிறங்கினாள். நல்ல சிவப்பு! உடம்பிலே உடுத்திண்டிருந்த ஜப்பான் சில்க் புடவை அப்படித் தூக்கியடிச்சுது, பாருங்கோ. ஆனால் அவள் மூஞ்சிதான் இப்போ என் கண் முன்னால் நிக்கறது—பளிச்சுன்னு, கன்னம் மழ மழன்னு, நெற்றி வெறிச்சுன்னு, முகத்திலே, கண், மூக்கு, உதடு, கன்னம் எதிலேயுமே எந்த மாதிரியான அசைவுகூட இல்லை. அப்படித்தான் விடிகாலை வேளையில் ஜலம் முனுக்குனு கூட அசையாமல் அப்படியே நிற்கும். அப்பறம் நாம் தான் அதைக் கலக்கி, அதன் வயத்தைக் கலக்கறோம். நீங்கள் பாத்திருக்கேளோ?”

“நான் பார்த்ததில்லை. ஆனால் நீ சொல்லுகையில் பார்க்கறேன்”

“ஆனால் அந்தப் பெண் எப்பவுமே அப்படியில்லே. அப்புறம் ஏதோ பேசிச் சிரிச்சுக் கூத்தடிச்சுண்டுதாணிருந்தாள். அன்னிக்கு அப்படி ஜட்கா வண்டியிலே வந்து இறங்கினவளா இப்படியானாள் என்று அடையாளம் கூட கண்டுபிடிக்க முடியல்லே. அவளுக்கு இன்னும் கொஞ்சம் அடக்கம் இருக்கலாம்னு அவள் அம்மா கூட சொல்லுவாள். ஆனால் அவள் கேக்கற வழியாயில்லே. என் மாமிகூட அப்புறம் அந்தப் பெண்ணோடெ நான் சேரப்படாதுன்னு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/22&oldid=1033384" இலிருந்து மீள்விக்கப்பட்டது