பக்கம்:அஞ்சலி.pdf/225

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காயத்ரீ 215

“பிரித்துப் பிரித்துக் கேட்டால் நான் என்ன சொல்ல?” அவள் திகைப்பு பரிதாபமாயிருந்தது. குழந்தைத்தனமாய், விபரீதமாயிருத்தாலும், உண்மையாயிருந்தது.

“காயத்ரீ, வாழ்க்கையில் உனக்கு என்னதான் வேண்டும்?”

“தெரியாது.”

“எதைத்தான் நீ தேடுகிறாய்?”

“தெரியாது.”

“இப்பிடிவாதம் எங்குதான் உன்னைக் கொண்டு போய் விடும்?”

“தெரியாது.”

“ஆனால் நீ போக வேண்டும் அல்லவா?”

“ஆமாம்.”

“அப்படியானால் போ போ—” இத்தனை நாள் அடக்கிக் கொண்டிருந்த ஆத்திரம், சீற்றம், ஆசாபங்கம் எல்லாம் ஒருங்கே சேர்ந்து என்னைத் தாக்கின. நான் நாற்காலியிலிருந்து குதித்து எழுந்தேன். “போ போய்விடு ஒடிப் போய்விடு—”

விலங்கு பதுங்குவதுபோல் ரத்னக்கம்பளத்தின்மேல் அவள் பதுங்கினாள். அப்பவும் அவள் சிற்பம்போல் அழகாய்த் தானிருந்தாள். அவள் முகபாவம் எதுவாயிருப்பினும் அது பயமில்லை. எனக்குக்கூட இவ்வளவு கோபம் வருமா எனும் வியப்புத்தான் தெரிந்தது.

“போய்விடு நிற்காதே. போனால் திரும்பி வராதே—உனக்காகவே இல்லாத மானம் வெட்கத்தை நான் எத்தனை நாள் காவல் காக்க முடியும்? உன் மானத்தை நீ விட்டபின், உன்னை எதுதான் தடுக்க முடியும்? Get out!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/225&oldid=1033513" இருந்து மீள்விக்கப்பட்டது