பக்கம்:அஞ்சலி.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

220 லா. ச. ராமாமிருதம்

“எனக்குத் தெரியும். உன்னிடம் நான் ஒளிக்கப் போவதில்லை. உனக்கும் இங்கும் இனி அதிக சம்பந்த மில்லை. நீ சீக்கிரமே காற்றோடு காற்றாய்க் கலந்துவிடப் போகிறாய்.”

“அப்பா, Thank you. இந்த சரீரம் எவ்வளவு பெரிய சிறை என்று எனக்குத் தெரிகிறது.”

“வால்மீகி! உனக்கு ஏதாவது வேண்டுமா? இந்த சமயத்தில் நான் செய்யக்கூடியது ஏதாவது உண்டா? உன் விருப்பம் எதுவாயிருந்தாலும் தெரிவி”

“எனக்கு இனி என்ன வேண்டும்? ஒன்றும் தெரியவில்லை. அப்பா, ஒன்று செய்வீர்களா?”

“என்ன?”

“உங்களுக்கப்புறம் சொத்துக்களை காயத்ரீக்கு வைத்துவிடுங்கள்” அவர் முகத்தை நான் பார்க்க முடியவில்லை. சற்று நேரம் பொறுத்து “சரி” என்று அவர் பதில் வந்தது. “நான் நாளைக்கே மாற்றிவிடுகிறேன். நீயே போய்விடும்போது, எனக்குச் சொத்துக்களால் என்ன பயன்?”

“அம்மாவின் வீணையை மாத்திரம் அவளிடம் கொடுக்கவேண்டாம். அது உங்களோடேயே இருக்கட்டும். உங்களுக்குப்பின் கோவிலிலோ பஜனை மடத்திலோ சேர்த்துவிடுங்கள்.”

“சரி.”

“அப்பா, அவள் அப்புறம் ஒரு நாள் தவிப்பாளே என்பதை நினைக்கக்கூட எனக்குப் பயமாயிருக்கிறது. அவள் ஒன்றும் அறியாதவள்.”

அப்பா ஒன்றும் சொல்லவில்லை.

“அப்பா அவள்மேல் நான் உயிரையே வைத்திருந்தேன்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/230&oldid=1033516" இலிருந்து மீள்விக்கப்பட்டது