பக்கம்:அஞ்சலி.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காயத்ரீ 221

“அதனாலேயே நீ உன் உயிரை இழந்துவிட்டாய். நீ துப்பும் ஒவ்வொரு ரத்தச் சொட்டிலும் உன் பிராணன் உன்னிடம் குறைந்துகொண்டிருக்கிறது. வால்மீகீ, உன் உயிர் உன்னுடையதுமில்லை; என்னுடையதுமில்லை; யாருடையதுமில்லை. ஆண்டவனுடையது. நீ பிறந்து இறக்கும்வரை நீ விடும் மூச்சுக்களைக்கூட எண்ணித்தான் உன்னிடம் கொடுத்து அனுப்பியிருக்கிறது. இப்பொழுது உனக்குத் தெரிந்திருக்கும். உனக்கு இறக்கத்தான் உரிமையுண்டு. உன்னிடம் ஒப்படைத்த உயிரை இழக்க உனக்கு உரிமையேயில்லை. யார் உயிரை யாருக்குக் கொடுக்க, நீ யார்? உன் உயிரை அவளுக்கு இழந்தபடியால், உன் வாழ்வை நீ வாழவில்லை.”

“நான் படுத்துவிட்டேன் என்று அவளுக்குத் தெரிவிக்கவில்லை. ஏற்கெனவே ஊசலாடிக்கொண்டிருக்கும் என் உயிரை இன்னும் ஆட்டிவிட்டுப் போவாள் எனும் பயத்தாலேயே அவளைப் பார்க்க எனக்குத் துணிவில்லை.”

“நீ இறந்தால் அவள் அழுவாள். உடைத்த பொம்மைக்குக் குழந்தை அழுவதுபோல்.”

“அப்பா, நான் மறுபடியும் என் வாழ்வை வாழ முடியுமா?”

“முடியும். மறுபடியும் பிறந்தால், மறுபடியும் உன் உயிரை இழக்காமல் இருந்தால், வாழ்வாய்.”

“அப்பா, மறுபடியும் நான் பிறக்க விரும்புகிறேன்.”

“நீ பிறப்பாய். பிறக்காமல் இருக்க முடியாது. மறுபடியும் பிறக்கத்தான் இறப்பு இருக்கிறது.”

“அப்பா, உங்களை நான் பார்க்க முடியவில்லை. உங்கள் கையைப் பிடித்துக்கொள்கிறேன். அப்பா, இந்த சமயத்தில் நீங்கள் வந்தது எனக்கு எவ்வளவு ஆறுதலா யிருக்கிறது தெரியுமா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/231&oldid=1033517" இலிருந்து மீள்விக்கப்பட்டது