பக்கம்:அஞ்சலி.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

226 லா. ச. ராமாமிருதம்

“அம்மாவுக்கு என்னிடம் ஒரே பல்லவிதான்: “ஏகா, நீ பொம்மனாட்டீடீ, தலைகுனி! தலைகுனி!”

எரிச்சலாய் வரும்.

சிரிப்புந்நான் வரும்.

—நம் கல்யாணத்தில் நீங்கள் கவனித்தேளோ இல்லையோ? தோழிப் பெண்போல் அம்மா என் பின்னாலேயே நின்றுகொண்டு, ஜடைபில்லையை சரிபண்ணுகிற மாதிரி என் தலையை அழுத்திண்டிருந்தாள். “தலைகுனி தலைகுனி!!”

—‘பெண்ணாய்ப் பிறந்துட்டையேடி, நம் ஜன்மம் வாழ்நாள் முழுக்கத் தலைகுனிஞ்சாகனும்டி!’

“ஆமா, இந்த வீட்டில் பெண்ணைத் தவிர என்ன பிறக்கறது?’ன்னுட்டேன் ஒரு தடவை. பளார்! வாய்மேலேயே புறங்கையாலடி. ரத்தம் பீறிட்டிண்டது. அம்மாவுக்கும் எனக்கும் என்னிக்குமே ‘லடாய்’தான். மாற்றாந்தாய் தோற்றாள். மனம் திறந்து சொல்றேன் எனக்கே மனசுலே வெச்சுக்கத் தெரியாது. அத்தோடு நான் சங்கல்பமே பண்ணிண்டிருக்கேன்— எனக்குக் கணவனாய் வருபவரிடம், தப்போ சரியோ எதையும் மறைப்பதில்லே. மனம் திறந்து சொல்றேன்: நீங்கள் எனக்கு வாய்ச்சது என் பூர்வ ஜன்ம புண்யம்—என்ன உதட்டைப் பிதுக்கறேள், கேலியா? இல்லை, சத்யமா—”

“உஷ்!” அவள் வாயைப் பொத்தினான்.வானம் பசித்தாற் போன்று அதன் விளிம்பில் ஒரு இடி உருண்டது. அவனுக்கு அச்சமாயிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/236&oldid=1026583" இலிருந்து மீள்விக்கப்பட்டது