பக்கம்:அஞ்சலி.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

236 லா. ச. ராமாமிருதம்

“என்ன சொல்றேள்? புரியும்படித்தான் சொல்லுங்களேன்!”

“உன்னை எழுப்பி எழுப்பி இப்பத்தான் அழுகை வருகிறது.”

ஏகா எழுந்து ஜன்னலண்டை போய் நின்றாள்.

“வானம் இருண்டிருக்கு”

“இந்தமட்டுக்கும் எழுந்தையோன்னா, அதான்!?”

“எனக்கு இரண்டு கண்ணும் துடிக்கிறது.”

“பஞ்சாங்கத்தில் ஒரு சமயம் ஒரு sideக்குத்தான் பலன் போட்டிருக்கிறது. இந்தக் கேஸில் நல்லதும் பொல்லாதும் ஒன்றுக்கொன்று ரத்து. Draw.”

“இல்லை, இரண்டுமேவா?”

அவனுக்குத் திக்கென்றது; எழுந்து உட்கார்ந்தான். நல்லதுடன் சேர்ந்துகூடக் கெடுதலை ஏற்க அவன் தயாராயில்லை.

“என்ன சொல்கிறாய்?” அவன் குரல் சற்றுத் தடித்தே ஒலித்தது.

“எனக்கே தெரிந்தால்தானே?”

“மக்கு! மக்கு!!” திரும்பிப் படுத்துக்கொண்டான். ஏகா கீழே இறங்கினாள்.

அதிசயத்திலும் அதிசயம் அம்மா இன்னும் ஊஞ்சலில் காலை நீட்டி அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். லேசாய்க் குறட்டைகூட.

கிணற்றடிக்குச் சென்று அவசரமாய்ப் பல் விளக்கினாள். நாக்கு வழிக்கையில் நாக்கில் தேன் தித்தித்தது. இவ்வளவு பித்தமா? இன்று எனக்கு உடம்பு வசத்தில்தான் இல்லை. நான் இதுவரை உடம்பு என்று படுத்தறியேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/246&oldid=1026715" இலிருந்து மீள்விக்கப்பட்டது