பக்கம்:அஞ்சலி.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஏகா 247

என்னோடு ஒளிந்துதான் பேசுகிறாய். உன் மறைவிலிருந்து வர உனக்குத் தைரியமில்லை. பேச்சென்ன உனக்கு?”

நான் பேசவில்லை. விளங்குகிறேன். மனிதன் என்னை அரூபமாய்ப் படைத்து அதுவே என் தன்மையாகவும் ஆக்கிவிட்டான். ஏகா, நான் உன் ரூப அடைக்கலத்துள் வந்துவிட்டேன். ஏகா, உன்னில் என் அரூபம் அதன் சாபம் களைகிறது. ஏகா என்னைக் காப்பாற்று, என்னை உதறாதே, நீ தந்த இடத்தைப் பிடுங்கிக் கொள்ளாதே! ஏகா நீயே என் கதி ஏகா, ஏகா—!

அவள் நெஞ்சத் தந்திகள் அழுதன. இது அழுதால் நான் ஏன் அழறேன்? புரியாமல் அழுதுகொண்டே, “என்மீது ஏன் வீணா அபவாதம் சுமத்துகிறாய்? உனக்கு எப்போ நான் இடம் தந்தேன்?” என்றாள்.

உங்கள் பாஷையில் நேற்றிரவு.

“உன் பாஷையில் எப்படி நான் தந்த இடம் நேர்ந்தது?”

நேற்று இரவு, ஒரு பிச்சைக்காரன் உன் வாசலில் வந்து நின்றான். ஞாபகம் வந்ததா? அவன் மூணு நாள் பசியில் அவன் கண்ணுக்கு வந்துவிட்ட உசிரில் நான் இருந்தேன். நான் எங்கும் நிறைந்தவன். அப்போத்தான் நீ பானையில் இருந்ததை இலையில் கவிழ்த்துக்கொண்டு—சாதம் குறைஞ்சுபோச்சு. உனக்கே போதாது, நல்ல உடம்பின் நல்ல பசி—உட்கார்ந்தாய். பிச்சைக் குரல் கேட்டதும் அப்படியே இலையோடு ஏந்திவந்து அவன் மடியில் போட்டுவிட்டாய். உன் மாமியார் கூட உன்னை வைதாள்.

“இல்லேம்மா அவன் பசிக்க எனக்கு இரங்காது. அதனால் இது அவன் சோறுதான்; பாருங்கோ அவன் சாப்பிட்டால் என் பசியாறும்” என்றாய்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/257&oldid=1033534" இலிருந்து மீள்விக்கப்பட்டது