பக்கம்:அஞ்சலி.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

248 லா. ச. ராமாமிருதம்

ஏகா நீ எனக்கு தரிசனம் ஆனாய். உன் தரிசனம் உனக்குத் தெரி யாது. ஆனால் என் கண்கள் எண்ணற்றவை. என் பார்வை எல்லை கடந்தது. ஏகா, அவன் பசி உன் பசியாய் எப்போ நீ உன்னை மறந்தாயோ, உன்னை இழந்தாய். உன்னை இழந்ததும் உன் தகுதியில் எல்லையற்றுப் பெருகிப்போனாய். அதனாலேயே, உன் விதியாகவே என்னையேந்தப் பாத்திரமானாய். ஏகா, கோபுரத்தைப் பொம்மைதான் தாங்குகிறது.

ஏகா சரணம்

சரணம் சரணம்

ஏகா சரணம்......

நீயும் நானும் சேர்ந்தே ஏகம்

நீயிலாது நானில்லை

நானில்லை...நானில்லை......நானில்லை......

“என்னம்மா நானில்லே நாணில்லே? எந்தத் தப்பை மறைக்கிறீங்க? மாமியாருக்குத் தெரியாமல் பால் ஏடை வழிச்சு முளுங்கிட்டீங்களா?—கொஞ்சம் திரும்பறீங்களா? முதுகைத் தட்டிப் பார்க்கலாம்!”

டாக்டர் குஷிப் பேர்வழி...சின்ன வயதுதான். ஆனால் குடும்ப டாக்டர், தமாஷ் பண்ண அவருக்கு உரிமையுண்டு.

“என்னம்மா முளிக்கிறீங்க? உண்மையைச் சொல்லிட்டேனா?”

“டாக்டர், எனக்கு வைத்யம் பண்ண வந்திருக் கேளா?”

“அப்படித்தான் சொல்லிக்கிறாங்க. இல்லை, முதலில் உடம்பில் கோளாறு கண்டுபிடிக்க வந்திருக்கிறேன். அப்புறம் கண்டு பிடிச்ச நோய்க்கு வைத்யம். நீங்க ஒண்னும் பயப்படாதீங்க, பத்தியம் வைக்கமாட்டேன். என் சிகிச்சையில் பழையது கட்டித்தயிரோடு சாப்பிடலாம்—”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/258&oldid=1033535" இலிருந்து மீள்விக்கப்பட்டது