பக்கம்:அஞ்சலி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18 லா. ச. ராமாமிருதம்

 புன்னகை புரிந்தவாறு அவள் முதுகைத் தட்டினான். “நீ ஒன்றும் செய்ய வேண்டாம். இப்போது எனக்கு ஒன்றும் இல்லை.”

தென்னைமட்டை ஓலைகளின் சலசலப்பு காற்றில் மிதந்து வருகையில் வானம் பெருமூச்சு விட்டது போலிருந்தது.

“சரி, வா. போவோமா? நேரமாய்விட்டது.” போக மனமிலாது தரங்கிணி தண்ணிரைப் பார்த்துக் கொண்டே நின்றாள்.

***

திடீரென நடுநிசியில் அவள் விழித்துக்கொண்டாள். மூச்சுத் திணறி, விழிகள் பிதுங்கின. கழுத்தை அவன் கைகள் நெரித்துக்கொண்டிருந்தன. படுக்கையில் அவள் பக்கமாக அவன் திரும்பிக்கொண்டிருந்தான். தூக்கத்தில் பயத்தின் கோபமும் சப்தங்கள் அவன் வாயில் காழத்தன. ஒருவாறாக அவன் பிடியை அவள் இரு கைகளாலும் உதறியெறிந்தாள். எழுந்து அவனை பலமாய் அசக்கினாள்.

“எழுந்திருங்கோ, எழுந்திருங்கோன்னா...!”

“ஊ...ம்?” சட்டென விழிப்பு வந்துவிட்டது.

“ஆ... என்ன? ஏதாவது பிதற்றினேனா என்ன்?”

“பிதற்றினேளா? அத்தோடு விட்டால் போதாதா?’’ நெஞ்சைத் தடவிக்கொண்டாள். இன்னும் வலித்தது.

அவன் எழுந்து உட்கார்ந்தான். முதல் வகுப்பு வண்டியில் அவர்கள் இருவர்தான்.


“இந்தாங்கோ, கொஞ்சம் தீர்த்தம் குடிங்கோ. என்ன கனா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/28&oldid=1033389" இலிருந்து மீள்விக்கப்பட்டது