பக்கம்:அஞ்சலி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42 லா. ச. ராமாமிருதம்

விட்டது. ஒரு தடவை மூக்கை சிந்தினால் எவ்வளவோ செளகரியமாயிருக்கும். ஆனால் பயம் தான் அழுவது அவருக்குத் தெரிந்துவிட்டால்?

சற்றுநேரம் கல்லைப் போட்டாற்போல் இருவரும் மெளனமாயிருந்தனர்.

“எனக்கு இன்று ஆபீஸிலிருந்து கடிதம் வந்திருக்கிறது. லீவு எல்லாம் எல்லை கடந்து எடுத்தாயிற்று இவ்வளவு தூரம் என் விஷயத்தில் அவர்கள் சலுகையாயிருந்ததே எனக்கு ஆச்சரியம். எட்டு மாதங்கள் சேர்ந்தாற்போல் உன்னிடத்தை விட்டு அசையவில்லை பார். மறுபடியும் வெளியூர் சுற்ற வேண்டும்.”

அவள் ஒன்றும் பதில் பேசவில்லை.

“இந்தத் தடவை அவர்கள் வகுத்திருக்கும் Tour ஐ முடிக்கக் குறைந்தது ஐந்து மாதங்களாவது ஆகும். ஆனால் இந்தத் தடவை உன்னைக் கூடவே கூட்டிக் கொண்டு போகப் போவதில்லை.”

அவள் வயிற்றுள் ஏதோ நெளிந்து புரண்டு மடிந்தது. ஆனால் சும்மாதானிருந்தாள்.

அவன் பார்வை ஜன்னலுக்கு வெளியே ஊன்றியது. உனக்கு ஒன்றும் அசெளகரியமாயிருக்காது என்று நினைக்கிறேன். உன் சொந்த இடத்திலேயே இருக்கிறாய். உன்னைச் சுற்றிலும் உனக்கு வேண்டிய மனுஷாள்தாம். பக்கத்தாத்து மாமியை ராத்திரி வந்து துணைக்குப் படுத்துக்கொள்ளச் சொல்லு, என்ன?”

“சரி.” (ஐயோ இந்த மூக்கை என்ன பண்ணுலாம்?)

“நாளைக் கானலயே புறப்படுகிறேன்” அவன் கைகள் சீவனற்று மடிமேல் கிடந்தன.

“தவிர, இதுதான் சரி என்று நினைக்கிறேன்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/52&oldid=1033403" இலிருந்து மீள்விக்கப்பட்டது