பக்கம்:அஞ்சலி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தரங்கிணி 45

அவன் மெளனமாய் நின்றான். அவள் குரல் கேவிக் கொண்டே போயிற்று. அவன் கரங்களைப் பிடித்து இழுத்துத் தன்மேல் அணைத்துக் கொண்டாள். அவள் கைகள் அவன் தோள்களினடியில் விலா எலும்புகளை நொறுக்கிவிடுவனபோல் இறுகின. நெகிழ்ச்சியில் கரைந்து விடுவான்போல் இருந்தது அவனுக்கு.

‘என்னை விட்டுட்டு எங்கே போறேள்?’ மார் வெடிக்கும் அழுகையில், உருக்குழம்பிப்போன சப்தங்கள் அவளின்று புறப்பட்டுக் கொண்டிருக்கையில்-—ங்கங்கள் இருளில் ஒன்றையொன்று தேடித் தவித்து அடையாளம் கண்டு கொள்கையில்—

தென்னந்தோப்புக் கப்பால், பட்டை வீறும் நிலாவில் வான் கவான் கீழ் காவேரி, குழந்தைகளின் சண்டையைப் பார்த்துப் பார்த்துக் கேட்டுக் கேட்டுப் பழுத்துப் பருமனான பாட்டி நினைத்து நினைத்துக் குலுங்கி நகைப்பதுபோல், தன் வெள்ளைச் சிரிப்பைச் சிரித்துக்கொண்டு பரவி, ஒரே அன்புப் பெருக்கெடுத்துக் கொண்டிருக்கிறாள். அவளுக்குத் தெரியாத ரகசியங்களே இல்லை. கலக்குபவளும் அவளே; கலங்குபவளும் அவளே. தெளிபவளும் அவளே; தெளிவிப்பவளும் அவளே. ஆற்றுபவளும் அவளே. ஆறுபவளும் அவளே.

அவன் வெளியிற் செல்லுமுன் வாசற்படியில் சற்றுநேரம் ஏதோ சொல்ல வாயெடுத்துத் தயங்கி நின்றான்.

“தரங்கிணி!”

“என்ன?”

“ஒன்றுமில்லை—” என்று தனக்குத்தானே தலையாட்டிவிட்டுப் போனான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/55&oldid=1033405" இலிருந்து மீள்விக்கப்பட்டது