உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அஞ்சலி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50 லா. ச. ராமாமிருதம்

அமர்த்தின. கைகள் மேஜைமேல் இருந்த அட்டையையும் காகித அடுக்கையும் பக்கத்தில் இழுத்துக் கொண்டன. மசியில் பேனாவைத் தோய்த்து, கை தானே எழுத ஆரம்பித்தது.

“—உங்களுக்கு இந்தச் சமயத்தில் என்ன எழுதறதுன்னு தெரியல்லே, உங்களுக்கு நான் இப்போ சொல்லணும்னு ஆசைப்படற விஷயங்கள் எங்கிட்டேருந்து எழும்பற வேகத்திலேயே என்னை அமுக்கறது, நான்...”

“போஸ்ட்!”

அந்தக் கூவல் அவளைக் கட்டியிருந்த மந்திரத்தை அவிழ்த்தது. தரங்கிணி எழுந்து கவரைக் கையில் வாங்கிக் கொண்டு கொல்லைப்புறம் சென்றாள். கதவுகள் எல்லாம் திறந்தன திறந்தபடியிருந்தன.

தென்னந்தோப்பைத் தாண்டி ஆற்றங்கரைக்குச் சென்றாள். ஜலத்துக்கு எதிரில் மணலில் உட்கர்ர்ந்து கொண்டு சாவகாசமாய் ஓரங்களில் மஞ்சள் தடவிய கவரை முன்னும் பின்னும் திருப்பிப் பார்த்துவிட்டு உடைத்தாள். பூவிதழ்கள் இரண்டும் அட்சதையும் மடியில் சிதறின. தரங்கிணி படித்துக்கொண்டே போனாள். விழிகள் முன்னும் பின்னுமாய் வரிகள்மேல் ஒடி அவைகளின் அர்த்தத்தைப் பருகுகையில் அவளையறியாமலே கைகளிலருந்து கடிதம் நழுவி மடியில் விழுந்தது. அவள் அதை எடுக்க முயலவில்லை. ஜலத்தைப் பார்த்தவண்ணம் அப்படியே சிலையாய் உட்கார்ந்திருந்தாள்.

எத்தனை நாழியோ?...தோய்க்கும் கல்லருகில் சிற்றலைகள் தத்தம் தோள்களை இடித்துச் சிரித்துக் கொண்டிருந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/60&oldid=1033407" இலிருந்து மீள்விக்கப்பட்டது