பக்கம்:அஞ்சலி.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88 லா. ச. ராமாமிருதம்

“விளக்கண்டை நிற்காதே என்று படித்துப் படித்துச் சொன்னேன். கேட்டால்தானே! சிரித்துக்கொண்டே எங்கோ பார்த்து நின்றால், விளக்கு விளையாடுகிறது.”

“அது சரி ஏதோ எல்லாத்துக்கும் ஒரு சமாதானம் உங்கள் கிட்ட இருக்கே! நீங்கள் பதில் சொல்ல முடியாத கேள்விகளே உலகத்தில் கிடையாது இல்லையா? உங்கள் காரியங்களுக்கும் அப்பீல் கிடையாது இல்லையா?”

“நீ எந்தக் காரியத்தைச் சொல்கிறாய் என்று எனக்குத் தெரியும்”

“பேஷ்!” என்றாள் மாஞ்சி. “நிஜமாவே நீங்கள் எனக்குப் புரியவில்லை. உங்களைப்போல், அப்படியே உங்களையே பாதியா வெட்டிக் கொடுத்துடறாப் போல, பிரியமாயிருக்கிறவாளையும் நான் பார்த்ததில்லை. அதே சமயத்தில், சில வேளைகளில், சாதாரண இரக்கம்கூட இல்லாத கொடுமை படைச்சவரையும் நான் கண்ட தில்லை. இல்லாட்டா அன்னிக்குக் குழந்தை வந்து வாசலில் கண்ணீரும் கம்பலையுமா நிக்கறா; அவள் மூஞ்சியிலேயே கதவைச் சாத்தி வாசற்படி ஏறாதேன்னு உங்களைத் தவிர எந்தத் தகப்பன் சொல்லுவான்?”

“அவள் சாதாரணமாய் எல்லாப் பெண்களும் பிறந்தகத்துக்கு வர மாதிரி வரவில்லையே!”

“ஆமாம் இருக்கட்டுமே; புக்ககத்தில் கோவிச்சுண்டு வத்துட்டான்னுதான் வெச்சுக்கோங்களேன். உள்ளே அவளைக் கூப்பிட்டு ‘என்னடிம்மா சொன்னான்னு கேட்டு, ஒருநாளாவது வெச்சுண்டிருந்து, அடுத்த நாள்—நீங்கள் போனால் உங்கள் கெளரவம் குறைஞ்சு போயிடறதாயிருந்தால்—நான் கொண்டுபோய் விடமாட் டேனா? அவளை அவாதான் என்ன சொன்னாளோ, என்னத்தைப் பண்ணினாளோ?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/98&oldid=1033435" இலிருந்து மீள்விக்கப்பட்டது