பக்கம்:அண்டகோள மெய்ப்பொருள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அண்டகோள மெய்ப்பொருள்

7

(இதுவே படைப்பிற்கு முன்னிலையுமாகும்) பரமாணுவே என்பதை ஸ்ரீபாகவதம் ௩-ஆம் ஸ்கந்தம் (கக-க) “பிர பஞ்சத்தின் இறுதியமிசம் பரமாணு என்றறியப்படுவது”. என விளக்கியவாற்றான் உணர்க. ௸௩-ஆம் ஸ்கந்தம் கக-ஆம் அத்தியாய முடிவில், “ஐம்பது யோசனை அகல முள்ளதும் மேன்மேலும் பதின்மடங்கு அதிகமுள்ள விசே ஷண முதலியவற்றால் வெளியிற் சூழ்ந்ததுமாகிய இவ்வண்டகோசமும் இன்னும் மற்றுமுள்ள பல்கோடி யண்டங்களும் எந்த வஸ்துவினிடம் பிரவேசித்துப் பரமாணுவாகக் காணப்படுகின்றனவோ அந்த வஸ்துவைக் காரணங்கட் கெல்லாம் காரணமெனவும், புருஷனும் மஹாத்மாவுமாகிய விஷ்ணுவின் ஸ்வரூபமெனவும், அக்ஷரமாகிய பாப்பிரமம் எனவுங் கூறுகின்றனர்” என வருதலான் இதனுண்மை நன்கறியப்படும். பலகோடி அண்டகோள வரிசைகளும் பரதெய்வத்தினிடம் பரமாணுவாக ஒடுங்கிக்கிடந்து பின் அவன் ஸங்கல்பத்தாற் பரிணமித்து அவ்வண்ட வரிசையாதலையே இங்குக் குறித்தா ரென்பது ஜகத்காரணமாகப் பரப்பிரமத்தைக் கூறுதல்கொண்டு எளிதிலறியப்படும். ‘ஆகி’ என்று பரிணமித்தல் கூறுதலான் இவ்வாரணு உயிரணு ஆகாமை நன்கறியலாகும். பிரபஞ்சமாகிய பரமாணுவுக்குப் பரிணாமம் உள்ளதல்லது, அணுவாகிய ஆத்மா விற்கு அஃதில்லாமை தெளிக. ‘அண்டகோளத்து ஆரணு’ என்புழி அத்துச்சாரியை “காமத்துக் காழில்கனி” (திருக் குறள்-1191) என்புழிப்போல அல்வழிச்சாரியையாகக் கொண்டு அண்டகோளமாகிய அரிய அணு எனினும் இழுக் காது. ஆகிப் பூத்த மரம் என இயையும்.

2. பிண்டம் பூத்த பேரெழி லொருமை என்பது சராசர ரூபமான பிராணிகள் மலர்தற்குக்காரணமான பெருமையோடு கூடிய நலத்தையும் ஏகத்வத்தையுமுடைய எ-று.