பக்கம்:அண்டார்க்டிக் பெருங்கடல்.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2. அண்டார்க்டிக் கண்டம்

இருப்பிடம்

உலகிலுள்ள நிலப் பகுதிகள் பலவற்றில் மக்கள் வாழ்கிறார்கள். அப்பகுதிகளிலிருந்து இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே பனி மறைந்து விட்டது. ஆனால், உலகின் தென்கோடியில் இன்னும் ஒரே ஒரு நிலப்பகுதி உள்ளது. அதிலிருந்து பனி இன்னும் நீங்கவில்லை. அதுதான் அண்டார்க்டிக் கண்டம் ஆகும். பொதுவாக, அண்டார்க்டிக் என்னும் சொல் நீர் என்னும் நிலையில் அண்டார்க்டிக் கடலையும், நிலம் என்னும் நிலையில் அண்டார்க்டிக் கண்டத்தையும் குறிப்பதாகும்.

இக்கண்டம் நிலவுலகின் தென் முனையைச் சுற்றி அமைந்துள்ளது. இதன் பரப்பு 55 இலட்சம் சதுர மைல்கள். ஒரே பனியும் பனிக் கட்டியும் நிறைந்த கண்டம். மக்கள் நடமாட்டம் இல்லாதது. பனிப் படலம் தெற்கேயும் வடக்கேயும் 1,000 மைல் அளவுக்குப் பரவியுள்ளது. இது உயரமான கண்டம்; கடல் மட்டத்திற்குமேல் 1 மைல் உயரமுள்ளது.

இதைச் சூழ்ந்துள்ள அண்டார்க்டிக் கடலில் மட்டும் பனிக்கட்டி 2 இலட்சம் சதுர மைல்கள் பரவியுள்ளது. கண்டத்தின் சராசரி உயரம் 6,500 அடி. தென் முனையிலுள்ள மேட்டுச் சமவெளி மட்டும் 11,000 அடி உயரம் உள்ளது.