பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சொல்லின் செல்வன் 31

இவற்றைக் கேட்டபின்பும் வாலி, பல கொடிய சொற்களைத் தம்பியின்மீது வீசினான். சுக்கிரீவனைச் சார்ந்த வானரர்களின் கூட்டம் அஞ்சி நடுங்கிப் பதுங்கி ஒளிந்தது. வாலியோ தம்பியைக் குத்திக் குமைத்துக் கலக்கினான் (64). சுக்கிரீவன் மிக உலைந்து நடுங்கி எழு கடல்கட்கு அப்பாலுள்ள இடத்தை அடைந்தான். வாலியும் பின்தொடர்ந்து சிங்கத்தைப்போல அலட்சியமாக அவன் மீது பாய்ந்தான் (65), இவ்வரலாற்றைக் கேட்ட இராமன் மிகவும் வியப்பெய்தி (66) மேலும் கூறுமாறு வேண்ட (67) அதுமனும் தொடர்ந்து கூறுவானாகினான். (நான்கு கவிகளில்)

"சுக்கிரீவன் சக்கரவாள மலைக்கு அப்பால் அண்ட பித்திகையை அடைந்து அதற்கு மேல் ஏகமுடியாத நிலையில் திகைத்து நிற்க, வாலியும் தொடர்ந்து சென்று அவனைப் பற்றிக்கொண்டனன் (68). பழிக்கு அஞ்சாத வாலி சினம் முற்றிய நிலையில் தன் வலிய கையினால் உயர எடுத்து மோதுதற்கு முயன்றபோது சுக்கிரீவன், அண்ணன் சோர்ந்திருக்கும் சமயம் பார்த்துத் தப்பி உய்ந்து ஒடிவிட்டான் (69), எமது சுவாமியே, வாலி கோபிப்பானானால் எமனுக்கும் ஒரு பாதுகாப்பான இடம் இல்லை. ஆனால், வாலிக்குச் சாபம் ஒன்று இருந்ததனால் சுக்கிரீவன் இந்த மலையைப் புகலிடமாகக்கொண்டு இருக்கின்றான் (70), ஐயனே, இந்தச் சுக்கிரீவனுக்கு உரியவளாகிய மனைவி உருமை என்பாளையும் விரும்பிக் கவர்ந்துகொண்டான். எனவே, இவன் செல்வத்தையும் தாரத்தையும் இழந்து இருக்கின்றான்." இதனைக் கேட்டவுடன் இராமன் வாலியின்மீது சினம் கொள்ளுகின்றான். "வாலியைக் கொல்வேன்” என்றும் உறுதி கூறுகின்றான். பாம்பின் கால் பாம்பு அறியுமன்றோ ! அநுமனது இந்தக் கூற்றால் அவனை நாம் சொல்லின் செல்வனாகக் காணமுடிகின்றது.

(5) இராமன் வாலியைக் கொல்ல வல்லவன் என்பதைக் கூறுமுகமாக : இராமன் வாலியைக் கொல்வேன் என்று கூறியவுடன் சுக்கிரீவன் நாங்கள் ஆலோசிக்க வேண்டுவது ஒன்று உளது என்று சொன்னான். அநுமன் முதலிய………

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/32&oldid=1509381" இலிருந்து மீள்விக்கப்பட்டது