பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

அண்ணல் அநுமன்


(கோமகன் ஆக்கி - அரசனாகச் செய்து: நேடு - தேடுவதற்கு)

என்று கூறுவான். சமயோசிதமான பேச்சு தொடங்கும் போதே உயிராய கருத்தை முன்வைக்கின்றான்.

'இராவணனது இருப்பிடம் தரையிலுள்ளதோ, மலைகளின் மேல் உள்ளதோ, வானத்திலுள்ளதோ, இவற்றிலும் வேறான பெரிய நாகலோகத்திலுள்ளதோ? நாம் மனிதப் பிறப்பின்பாற்பட்டிருத்தலால் இன்னவிடத்தென்று எளிதில் அறியக்கூடியதன்று’ (29)."

"அந்த இராக்கதர் ஒருநொடிப் பொழுதில் எல்லா உலகங்களிலும் போய்ச் சேருவர்; சென்ற இடங்களில் எல்லாம் தாம் விரும்பிய பொருள்களை எல்லாம் கவர்ந்து கொள்வர்; கொடிய வினை வந்தாற்போல் வருவர்; திரும்பிச் செல்வர். ஆதலால், அவர்தம் உறைவிடம் எளிதில் அறியற்பாலதன்று (30).

"ஒரேசமயத்தில் உலகங்கள் எல்லாவற்றிலும் சென்று பரவி, பிராட்டியிருக்கும் இடத்தைத் தேடி அறிய வேண்டும். அங்ஙனமன்றி ஒவ்வோரிடமாகத் தேடுவதால், உலகம் பரந்து கிடத்தலால் சிரமம் உண்டு; தேடுவதிலும் பல்லாண்டுகள் கழியும் (31).

"எம்மிடத்துள்ள எழுபது வெள்ளம் என்னும் தொகையுடைய வானரச் சேனை கற்பாந்த காலத்துக் கடல்போல உலகம் முழுதும் பரந்து மூடவல்லது. ஆழியை அருந்த வேண்டுமானாலும், அயன் படைத்த அண்டத்தைக் கீழே பிடித்து எடுக்க வேண்டுமென்றாலும், தமக்கு நேர்ந்த கட்டளையைத் தவறாமல் செய்யும்" (32).

இஃது அநுமனது முத்தான முத்தாய்ப்பான பேச்சு சோர்வுற்ற இராமனுக்குக் கிளர்ச்சியும் உற்சாகமும் ஊட்டும் பான்மையது. இராமனும் சிறிய திருவடியின் யோசனையை அங்கீகரிக்கின்றான். _________________________________________________ 17. அநுமன் முதலியோர் முகத்திலும் வாலிலும் வானரம் போலிருப்பினும், மற்றபடி மனிதர் போன்ற வடிவமுடையவராதலால், அநுமன் தன்னையும் பிறரையும் மானிடருடன் உளப்படுத்திக்கொண்டான் என்பது அறியப்படும். ………..

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/35&oldid=1509384" இலிருந்து மீள்விக்கப்பட்டது