பக்கம்:அண்ணாமலை என்னும் அற்புத மனிதர்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அண்ணாமலை என்னும் 18



'இயற்பகை நாயனாரும்’-

அருட்பாடல்கள் பலவற்றைப் பாடியுள்ள ‘பட்டினத்து அடிகளும்’ இம்மரபினைச் சேர்ந்தவர்களே.

சுருங்கச் சொன்னால், சங்ககாலம் எனப்படும் மூவேந்தர் காலம் முதல், நகரத்தார் மரபு சிறப்புற்று விளங்கியது என்று கூறலாம்.

இந்த வணிக மரபினர் சிறப்பாகத் தொழில் புரிந்து- ஏராளமாகப் பொருள் சேர்க்கும் திறன் படைத்தவர்கள். நேர்மையும், நியாயமும், இறைபக்தியும் உடையவர்கள். உள்ளூரிலும், கடல் கடந்தும் பொருள் ஈட்டும் நிமித்திம் தொழில் புரியச் செல்பவர்கள். இவர்கள் -

ஈழம், கடாரம், தூரகிழக்கு நாடுகளுக்கெல்லாம் சென்று வாணிகத் துறையில் ஈடுபட்டு வந்தனர்.

இப்படிப் பொருளீட்ட அன்னியநாடு செல்லும் தனவணிகர்கள் சுயநலத்தோடு வாழாமல்-

தாங்கள் தொழில் புரியும் நாடுகளும் செழிப்புற்று இருக்க வேண்டும் என்கிற மேலான எண்ண முற்றிருந்தனர். அந்த நாடுகளின் வளர்ச்சிக்கும் பேருதவி புரிந்து பிறர் பாராட்டும் வண்ணம் வாழ்ந்து வந்தனர்.

இவர்களுடைய வரவால் - வாணிகத் திறத்தால் அந்த நாடுகள் வளம் பெற்றன என்று சொல்வது மிகையாகாது.