பக்கம்:அண்ணாவின் ஆறு கதைகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிரார்த்தனை

55


விட்டுவிடவில்லையா ? நான் உன்னை கடைசி வரை காப்பாற்றுவேன்.”

“ஊஹும், நான் ஒத்துக்கொள்ளமாட்டேன்.”

கடைசியில் அவள் ஒத்துக்கொண்டாள். எதற்கு? விடியற்காலை 5 மணிக்கு, கதவைத் திறந்து அவனை வெளியே அனுப்ப! அவன் மகா சமர்த்தன். அவளை இணங்கச் செய்து விட்டான். தாயம்மாளுக்கு இது சம்மதமென்று அன்னத்தை நம்பச் செய்துவிட்டான்.

பொழுது விடிந்தது, போதை தெளிந்து, தாயம்மாள் புதியவனைத் தேடினாள், புன்னகையுடன், அன்னம், “அவர் அரை மணி நேரத்திற்கு முன் தானம்மா போனார். இராத்திரிக்கு வருவதாகச் சொன்னார்” என்று கூறினாள். தாயம்மாள், “அவனிடம் உனக்கென்னடி பேச்சு?” என்று கோபித்துக் கேட்டாள். அன்னத்தின் அறைக்கும் போனாள். “அடிவயிற்றிலே அடித்துக்கொண்டாள்.” “ நீயும் இந்த வழிக்குத்தான் வந்துவிட்டாயா? அடிப்பாவி” என்று அலறினாள். அங்கு கட்டிலின் மீது அவனுடைய கைக்குட்டை விழுந்திருக்கக் கண்டு.

“நீ சொன்னதாகச் சொன்னார். எழுப்பிக் கேட்கலாமென்று பார்த்தேன். நீ ஓரே மயக்கமாக இருந்தாய் என்றாள் அன்னம்.”

தாயம்மாள் அதற்குமேல் ஒன்றும் பேசவில்லை. கன்னத்திலே கையை வைத்துக் கொண்டு உட்கார்ந்தாள், கண்களிலே நீர் தளும்பிற்று.

கண்டிராக்டரைக் கேட்டுக் கேட்டுப் பார்க்கிறாள் தாயம்மாள். அன்று வந்தாரே அவர் எங்கே? என்று. மூன்று மாதத்திற்குப் பிறகு, சிரஞ்சீவி சிவாநந்தனுக்கும், சௌபாக்கியவதி சுத்தரிக்கும் விவாஹ சுப முகூர்த்தம் என்ற திருமணப் பத்திரிகையைக் கொடுத்தார். கண்டிராக்டர். அன்று வந்தானே அவனுக்குத்தான் கலியாணம் என்று சொன்னார்.