பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

117


-தில் பசியைத்தான் பிணிகளில் கொடியது என்றார்கள், அது மட்டுமல்ல; பசிப்பிணி மருத்துவர்கள் என்று மன்னர்களை அவர்கள் அழைத்திருக்கிறார்கள். பசியைத்தீர்க்கின்ற காரணத்தால் மன்னர்களை பசிப்பிணி தீர்க்கும் மருத்துவர்கள் என்றனர். ஆகவே அப்படிப்பட்ட பசிப்பிணியைத் தீர்க்கின்ற மருத்துவர்களாக உங்களை நீங்கள் கருதிக்கொள்ள வேண்டும். ஆகவே எல்லாவற்றையும் விட சிறந்த தொண்டு பசிப்பிணியைத் தீர்த்து வைப்பது.

பசிப்பிணியைத் தீர்க்கும் பிரச்சினைக்கு வேறெந்தப் பிரச்சினையும் ஈடாக முடியாது. உணவு உற்பத்தியைப் பெருக்க சர்க்கார் பண உதவி செய்திட வேண்டும் என்று கேட்கலாம். சர்க்கார் பணத்தை உண்டுபண்ணும் இயந்திரமல்ல. பணத்தை உண்டு பண்ணுவதுகூட வடநாட்டிலே உள்ள அரசினர்தானே தவிர தமிழகம் இல்லை.

சலுகைகளைத் தரவேண்டும் என்று கேட்கின்ற நேரத்தில் அப்படிப்பட்ட சலுகைகளை எந்தெந்த வகையில் பெறலாம் என்பதைச் சிந்திக்க வேண்டும்.

கருத்தரங்கிலே கருத்துக்களை எடுத்துச் சொன்னார்கள். அதில் எவற்றையுமே நான் மறுத்துச் சொல்லவில்லை. சொல்லப்பட்டக் கருத்துக்களெல்லாம் நியாயமானவை. எல்லாம் உண்மை நிரம்பியனவாகவே இருக்கின்றன. இதனை நான் மறுக்கவோ - மறைக்கவோ போவதில்லை.

நியாயத்தை நிறைவேற்றித் தர இயலும். அப்படி நிறைவேற்றுவதற்குக் கொஞ்சம் காலம் தேவை, சம்பந்தப்பட்ட அதிகாரிகளைக் கலந்து பேசி இவற்றைத் தீர்ப்பதில் நான் பெருமளவுக்கு அக்கரை காட்டுவேன். சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களைப்பற்றிக் குறிப்பிடும்போது தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை எடுத்துச் சொன்னார்கள். நான் அவற்றை மெத்தக் கவனத்துடன் கேட்டுக் கொண்டிருந்தேன். உள்ளபடியே. அவைகள் உடனடியாகத் தீர்த்து வைக்கப் பட வேண்டியது தான்.