பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118


காமராசர் கூறிய
உறுதிமொழி!

முன்னாள் முதலமைச்சர் காமராசர் பாகல்மேட்டிலே மாநாடு கூட்டி. பாகல்மேடு சிறிய நீர்ப்பாசனத் திட்டத்தைத் தந்தேன் - தந்து விட்டேன் என்று உறுதி கூறினார். ஆனால் சட்ட மன்றத்திலே நிதி நிலை அறிக்கையை சமர்ப்பித்தபோது அத்திட்டம் குறிப்பிடப் படவில்லை. "என்ன, திட்டத்தை தந்து விட்டதாகச் சொன்னீர்களே நிதி நிலை அறிக்கையில் அதற்கான குறிப்பையே காணோமே" என்று கேட்டபோது. 'அது நிறுத்தி வைக்கப்பட்டது” என்றார்.

இப்படிப்பட்ட கசப்பான அனுபவத்தைத் தெரிந்துவைத்திருக்கிற காரணத்தால் கூறுகிறேன். தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளைச் சந்தித்து வேளாண்மைத்துறை அமைச்சரையும் - பொதுப்பணி அமைச்சரையும் உணவு அமைச்சரையும் கலந்து பேசி எவ்வளவுவிரைவாகத் தீர்த்து வைக்க முடியுமோ அவ்வளவு விரைவாகத் தீர்க்கிறேன் என்று நிதியமைச்சர் என்ற முறையிலும் முதலமைச்சர் என்ற முறையிலும் இதற்கான வழிவகைகளை ஒரு துளியும் தயக்கம் காட்டாது கண்டுபிடிக்கிறேன்.

உடனடியாகச் செய்யக்கூடிய ஒன்று உரவிநியோகத்திலுள்ள சிக்கல்களைத் தீர்ப்பது. உர விற்பனை தனியார்களாலும் கூட்டுறவாளர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இது சம்பந்தமாக நான் கவனம் செலுத்திக் கூட்டுறவாளர்களைக் கலந்து பேசினேன். ஆதாயக் குறைவு வந்தாலும் குறைந்த விலைக்கு உரத்தைத் தரவேண்டும் என நான் கேட்டுக் கொண்டதை அவர்கள் ஏற்றுக்கொண்டு குறைந்த விலையில் கூட்டுறவு மூலம் உரம் தருவதற்கு ஒத்துக் கொண்டுள்ளார்கள். என்ற செய்தியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.