பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

121


தஞ்சையிலே வயலா - குளமா என்று எண்ணும்படியாக நீர் பாய்ச்சப் படுகின்றது. கோவையிலே தண்ணீரைத் தெளித்தது போல தெளித்தே விவசாயம் செய்கிறார்கள். தஞ்சையைக் காட்டிலும் கோவையிலே கண்டு முதல் அதிகமாகிறது. இவைகளெல்லாம் கருத்தரங்கில் ஆராயப்பட வேண்டும்.

கருத்தரங்குகளில் பெரும் பேராசிரியர்களையும் ஆராய்ச்சியாளர்களையும் அழைத்து உரையாற்றச் செய்தால் நல்ல பலன் ஏற்படும்.

உணவு உற்பத்தியைப் பெருக்க வேண்டுமென்றால் தரிசு நிலங்களைச் சாகுபடிக்குக் கொண்டுவர வேண்டும். பாசன வசதிகளை அதிகப்படுத்த வேண்டும். இனி நாம் புதிதாக அணை கட்டுவதற்கும் இடமில்லை.

பூமிக்கடியில் இருக்கும் நீரை வெளிக்கொண்டு வந்து பயன்படுத்த வேண்டும். சர்க்கார் வருமானத்தில் எவ்வளவு செலவு செய்ய முடியுமோ அவ்வளவு செலவையும் செய்வோம். ஆனால் ஐந்தாண்டுத் திட்டத்திற்கு ஒதுக்கும் பணத்தைக் கொண்டு மட்டும் இது போன்ற சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களை நிறை வேற்றிவிட முடியாது.

தமிழ் நாட்டில் 13 ஆயிரம் ஏரிகள் இருக்கின்றன. சோழா் காலத்திலும் - பல்லவர் காலத்திலும் வெள்ளைக்காரர்கள் காலத்திலும் வெட்டப்பட்ட ஏரிகள் 18 ஆயிரம் ஏரிகள் இருக்கின்றன.

வட ஆற்காடு - செங்கற்பட்டு மாவட்டங்கள் ஏரிப்பாசனத்தையே பெரிதும் நம்பி இருக்கின்றன.

இந்த ஏரிகளையெல்லாம் ஆழப்படுத்தினால்-அகலப்படுத்தினால் தான் ஏழைகளின் வீட்டில் பால் பொங்கும்.