பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

ஏழை முகத்துப்
புன்னகை...

வெளியுலக விளம்பரத்தை விட ஏழை முகத்தில் புன்னகை வெளிப்படுவதைத் தான் இந்த சர்க்கார் பெரிதும் விரும்புகிறது !

மக்கள் இது கேட்டால் ஆச்சரியப் படுவார்கள். பக்தவத்சலம் அறிந்தால் வருத்தப்படுவார். இந்த ஏரிகளில் மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களில் பழுது பார்க்கப் பட்ட ஏரிகளின் எண்ணிக்கை 1500 தான்! மிச்சம் 12 ஆயிரத்து 500 ஏரிகள் பழுதுபார்க்கப் படாமலிருக்கின்றன. இவற்றையெல்லாம் பழுது பார்ப்பதற்குள் - பழுது பார்க்கப்பட்டவை சீர் குலைந்து விடும்.

நாங்கள் பதவிக்கு வந்த பிறகு இந்த ஐந்தாண்டுக் காலத்திற்குள் பெரும்பாலான ஏரிகளையும் புயலால் உடைபட்டுள்ள மதகுகளையும் பழுது பார்க்க இருக்கிறோம்.

ஆகவே இதற்கெல்லாம் சேர்த்து 10 கோடி ரூபாய் மத்திய சர்க்கார் நிதிதர வேண்டும் என்று முதலமைச்சர்கள் மாநாட்டிலேயே நான் கேட்டுக் கொண்டேன்.

இந்த நீர்ப்பாசனத் திட்டத்துக்கு 10 கோடி ரூபாய் ஐந்தாண்டுத் திட்டத்திற்குத் தரப்படும் தொகை நீங்கலாகத் தரப்படுமானால் - சில ஆண்டுகளுக்கு உர விலையை ஏற்றாமலிருப்பார்களானால் ரூபாய்க்கு ஒரு படி அரிசி போடுவதால் ஏற்படும் நஷ்டத்தைத் தாங்கிக் கொள்ள முடியும்.

அரிசி விலை குறைக்கப்பட்டால் - மற்ற மற்றப் பொருள்களின் விலைவாசி குறைந்தால் பஞ்சப்படி குறையுமே என்று சொல்லுகிறார்கள் அப்படிப்பட்டவர்களைக் கேட்கிறேன்.

"எங்களுக்கு ரூபாய்க்கு ஒரு படி அரிசி வேண்டாம் - பழைய விலைக்கே வாங்கிக் கொள்கிறோம்" என்று எழுதிக் கொடுக்கட்டுமே - தாராளமாக ஏற்றுக் கொள்கிறேன்.