பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

125


-கும் பாசனத்தை ஏற்படுத்த ரூ.8 ஆயிரம் வரை செலவழிக்க வேண்டியிருந்ததாக அதிகாரிகள் என்னிடம் தெரிவித்தார்கள். இவ்வளவு நிறைய செலவழித்து அதற்கேற்ப வரியைப் போட்டால் அதை நம் விவசாயிகள் தாங்குவார்களா? எனவே அரசு தன்னாலானதைச் செய்கிற அதேநேரத்தில் - பூமிக்கடியில் கிடைக்கும் நீரை விவசாயிகள் அதிக அளவில் பயன்படுத்தும் படி ஊக்கு விக்கவேண்டும்.

பூமிக்கடியிலிருந்து கிடைக்கும் நீர் தாதுச்சத்துக்கள் குறைந்தது என்று விவசாயிகளிடத்தில் நிலவுகின்ற அவ நம்பிக்கையைப் போக்க வேண்டும்.

ஒருகாலத்தில் இரசாயன உரத்தைப் பற்றிக்கூட இப்படித்தான் கருதப்பட்டது. இன்று அந்த நிலைமையில்லை. கலப்பு உரமா அதை நாங்களே தயாரித்துக் கொள்கிறோம், தேவையானதைமட்டும் எங்களுக்குக் கொடுத்துதவுங்கள் என்ற அளவுக்கு விவசாயிகளிடம் உரத்தைப் பற்றிய அறிவு வளர்ந்துள்ளது.

தீவிர சாகுபடித் திட்டமென்பது தஞ்சைமாவட்டத்துக்கு மட்டும் உரியதாக இருந்தால் போதாது. மாநில முழுவதும் தஞ்சையை எதிர்பார்ப்பதென்பதும் இயலாது. எனவே படிப்படியாகத் தீவிர சாகுபடித் திட்டம் மற்ற மாவட்டங்களுக்குப் பரவ வேண்டும். இம்மாநிலம் உபரிமாநிலமாக வேண்டுமென்றால் அது ஒன்றே வழி!

தமிழ்நாட்டு உணவு உற்பத்தியை அதிகரிக்க சிறிய நீர்ப்பாசனத்திற்கு ரூ.20 கோடி செலவிட வேண்டுமென்று கூறி அதற்கான திட்டம் முழுவதையும் அழகுபட அச்சேற்றி புத்தகவடிவில் கொண்டு போய் நான் டெல்லியில் கொடுத்து வந்தேன். ஆனால் இன்று வரை அதற்கான பதிலே வரவில்லை. எந்தத் திட்டமானாலும் அதைச் சிறப்புற ஆற்றிக் கொடுக்கும் அதிகாரிகள் இங்கே இருக்கிறார்கள். தேவையானதைக் கொடுத்தால் உற்பத்திசெய்து குவிக்கும் உழைப்பாளர்களாக நமது உழவர்கள் இருக்கிறார்கள்.