பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

அல்ல ! எல்லாத்துறைகளுக்கும் ஒரு திருப்பத்தை, ஓரு புதிய பொலிவை, வலிவைக் கொடுத்தவர்.

ஒரு நாட்டின் முன்னேற்றம் ஏதோ ஒரு துறையிலே மட்டும் பெறப்படுகிற வெற்றியைப் பொறுத்தது அன்று. எல்லாத்துறைகளிலும் வெற்றி காணவேண்டும். அவைகளின் ஓட்டு மொத்தத்தைக் கொண்டே அந்நாடு முன்னேற்றம் அடைந்திருக்கிறதா என்ற கணக்குப் பார்க்க வேண்டும்,

ஒரு நாட்டின் வரலாற்றிலே அவ்விதமான ஒரு கணக்கு அடிக்கடி கிடைக்காது; ஒரு நூற்றாண்டுக்கு ஒரு முறை கிடைக்கும் என்றும் கூறிவிட முடியாது. அந்தக் கணக்கு இந்நாட்டுக்கு காந்தியடிகளின் வடிவத்திலே கிடைத்தது. எனவே தான் காந்தியடிகளின் பிறந்தநாள் ஒரு மாபெரும் தலைவரின் பிறந்த நாளாக மட்டுமின்றி, ஒரு நாட்டுக்குக் கிடைத்த நற்காலம், என்ற முறையிலே சிறப்புப் பெறுகிறது.

மகான்கள், மாவீரர்கள்- ஆகியோரின் பிறந்த நாட்களைக் கொண்டாடும் கவர்ச்சி மிகுந்த நாடு நம் நாடு. புகழ் பாடுவதில், பூஜைகள் நடத்துவதில். வல்லவர்கள் நாம்!

ஆனால் யாருக்காகத் திருநாள் நடத்துகிறோமோ, எவருடைய திருநாமத்தை பூஜிக்கிறோமோ, எவருடைய ஆற்றல் பற்றிப் புகழ்ந்து பேசுகிறோமோ அவர்கள் காட்டிய நெறியிலே நடக்கிறோமா என்றால், இல்லை என்ற பதிலையே ஏக்கத்துடன் பெற முடிகிறது.

இன்று ராட்டை சுழலுகிறது — நாளை? எத்தனை பேர்? —
இன்று சேரிகளிலே சென்று சேவை செய்கிறோம். நாளை?
இன்று வகுப்பு ஒற்றுமை பற்றிப் பேசுகிறோம், எழுச்சியுடன் - நாளை?
இன்று கிராமங்களிலேதான் நாட்டின் இதயம் இருக்கிறது, என்று உணர்ந்து பேசுகிறோம்— ஆனால் மறுநாள்?