பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

மால் முடியுமா அவர் செய்ததைச் செய்ய? என்று பேசி, நமது செயலற்ற போக்குக்கு ஒரு சமாதானம் தேடிக் கொள்ளவே அது மெத்தவும் பயன்படுகிறது.

அந்த முறையிலே காந்தி அடிகளின் பிறந்த நாளை நடத்துபவர்களாக நாம் இருந்துவிடக்கூடாது என்பதற்காகவே இதனைக் கூறுகிறேன்.

பாராட்டுப் போதாது
பணிசெய்ய வேண்டும்.

அவரை அவதார புருஷர்களிலே ஒருவர், பூஜைக்கு உரியவர், அவர் பிறந்த நாளன்று அவர்பற்றிய மகிமையை, அற்புதத்தைப் பேசுவது போதும்; என்று இருந்திடாமல்; அவர் காணவிரும்பிய சமுதாயம், அவர் எடுத்துக் காட்டிய இலட்சியம்,அவர் விளக்கிச் சென்ற தூய்மை ஆகியவற்றினை நினைவிலே கொண்டு, அதற்கான முறையிலே. பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

ஆகாயத் தாமரையைப் பறித்துக் கொடுத்திடும் அற்புதம் அவர் காட்டினாரில்லை ; ஆனால் ஊமைகளாய் இருந்து வந்த மக்களைப்பேச வைத்தார் ; உரிமைமுழக்க மிடச் செய்தார் ; படைபல வந்திடினும் தடை பல நேரிடினும் அஞ்சாதீர் என்றுரைத்தார்.

‘அஞ்சி அஞ்சிச் சாவார்! அவர் அஞ்சாத பொருள் இல்லை அவனியிலே, என்று துக்கம் தோய்ந்த குரலிலே பாடினாரே பாரதியார், அந்த அச்சத்தைத் துடைத்தார்; ஆயுதம் தாங்கியவர் எதிரில்; சாகப் பயப்படாதாரின் ஓர் அணிவகுப்பை நிறுத்திக் காட்டினார். சிட்டுக் குருவிகளுக்கு வல்லூறை எதிர்த்திடும் ஆற்றல் ஏற்படச் செய்தார். நம்மால் என்ன ஆகும் என்ற ஏக்கத்தை விரட்டினார். நாமிருக்கும் நாடு நமது என்பதறிந்தோம் என்ற உறுதி எழச் செய்தார்!