பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51

 சர்க்கஸ் காரி ஒருத்தி கம்பியின் மேல் நடப்பதைப் பார்த்து, பூ என்ன பிரமாதம், இருபக்கமும் கையை நீட்டிக் கொண்டு ஆடாமல் அசையாமல் நடந்தால் கம்பிமேல் நடக்கலாம், என்று பார்வையாளர்களில் சிலர் கூறுவர். இது எவ்வளவு தூரம் நகைப்புக்கிடமாகிறதோ, அவ்வளவு தூரம் பிரமாதமா என்பவா்களும் நகைப்புக் கிடமாகிறார்கள்.

தண்ணீர் இறைக்கும் போது இரண்டு கையாலும் இழுத்தால்தான் தண்ணீர் வரும். சர்க்கஸ் பார்த்த ஞாபகத்தில் ஒருகையால் இழுத்தால் எப்படி நீர் வராதோ அது போல் அரசாங்கத்துடன் ஒத்துழைக்காமலிருந்தால் எந்தப் பலனையும் முழுமையாக அடைய முடியாது.

மக்களுக்கு அரிசி கொடுப்பதற்காக எத்தனை நாள் பாடுபட்டோம்? என்னென்ன இக்கட்டான சூழ்நிலைகளை மேற்கொண்டோம்? எவ்வளவு முயற்சிகள் செய்தோம்! அதை விட்டு விட்டு என்ன பிரமாதம் என்பது முறையாகுமா?

நாங்கள் மூன்று மாதத்தில் செய்ததை அவர்கள் ஏன் இருபது வருடங்களாகச் செய்யவில்லை? மக்கள் வாழ்வைப் பற்றி அவர்களுக்கு அக்கறையில்லை!

அரிசியில்லை. என்றால் பால் சாப்பிடச் சொன்னார்கள் -- அதுவும் இல்லையென்றால் பழம் சாப்பிடச் சொன்னார்கள். ஒருவர் எலியைச் சாப்பிடலாம் என்றார். நல்ல வேளை அவர்கள் ஆட்சிக்கு வரவில்லை, வந்திருந்தால் பகலில் தவளைக் குழம்பும், இரவில் எலிக்கறிக் கூட்டும் சாப்பிடச் சொல்வார்கள்.

சென்னையைப் பொறுத்த வரை எலிகள் அதிகமில்லை. பெருச்சாளிகள்தான் எங்கு பார்த்தாலும் ஓடிக் கொண்டிருக்கிறது. பிள்ளையாருக்கு அது வாகனம் என்று கூறி அப்படிப் பட்ட பெருச்சாளியைச் சாப்பிடக் கொடுத்து வைக்க வேண்டும் என்ற காரணங் கூறி சாப்பிட வற்புறுத்தியிருப்பார்கள்