பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54


அல்லது மத்திய அரசை எதிர்த்துக் கிளர்ச்சி செய்ய வேண்டுமென்று சொல்லட்டும், அது அவர்களாகச் சொல்ல வேண்டும்.

விளக்கிற்கு எண்ணெய் ஊற்றி எரித்தால்--திரி நன்றாக இருந்தும் விளக்கு எரியவில்லையென்றால் எண்ணெயில் தான் கோளாறு என்று பொருள். எண்ணெய்க் கடைக்காரனிடம் சென்று ஏனய்யா இப்படி மட்டமான எண்ணெய்யாகக் கொடுத்து விட்டாய் என்று கேட்டால் என்னையா கேட்கிறாய் என்று அந்தக் கடைக்காரன் கேட்பானா?

அதைப் போல ஏழை எளியவர்களுக்கு படி அாிசி போடுவதால் இந்த வருடத்தில் எட்டுக் கோடி ரூபாய் நட்டம் ஏற்படுகிறது.

ஆறுமாதங்கள் மட்டும் கணக்கெடுத்தாலும் ஐந்து கோடி ரூபாய் நட்டம் வருகிறது. இந்த நட்டத்தை ஈடு செய்ய உதவி செய் என்றால் என்னையா கேட்கிறாய் என்று கேட்கிறது டில்லி அரசு.

மாநிலம் என்ற குழந்தையை அந்தந்த மாநில அமைச்சர்களே காப்பாற்றிக் கொள்ளட்டும் என்று கூறுகிறார்கள். அதன்படியே வைத்துக் கொண்டால் என் குழந்தைக்கு நான் என் சொந்த முயற்சியில் ஈடுபடும்போது நீ தடையாகவோ -- பங்குக்கோ வரக் கூடாது.

இது தான் போகட்டும் விலைவாசி ஏற்றத்திற்குக் காரணம் என்ன? நானா அதற்குப் பொறுப்பாளி? நாங்களா முன்பு ஆட்சி புரிந்தோம்?

ஜோதியம்மாள் ஏற்றிய விலையை சத்தியவாணிமுத்து அம்மையாரா குறைப்பார்கள் ? கக்கன் ஏற்றிய விலையை கருணாநிதியா குறைப்பார்? விலையை ஏற்றுவது மட்டும் பக்தவத்சலம்! இறக்குவது மட்டும் நானா? வேடிக்கையான விவாதமாகத்தான் பார்த்தவர்களுக்குத் தெரியும்.