பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

55


கொட்டும்
தேள்!

தேள் கொட்டிவிட்டுச் சென்றுவிடும். கொட்டிய இடத்தில் மருந்து போடும் வரை விண்விண் என்று தெறிக்கும். அது போல் காங்கிரஸ் என்ற தேள் மக்களைக் கொட்டிவிட்டுச் சென்று விட்டது. அதற்கு மருந்து போடத்தான் நாங்கள் வந்திருக்கிறோம். போடும்வரை கொஞ்சம் வலியேற்படத் தான் செய்யும். பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்திருங்கள். சொன்னபடியே அரிசிபோடுகிறேன்.

இந்தியா முழுவதற்கும் வெளிநாடுகளில் கோதுமையை வாங்கி -- அதிலும் அதிக விலைக்கு வாங்கி குறைத்து விற்றார்கள். அதுவும் உத்திரப்பிரதேசம் மத்தியப் பிரதேசம் ஆகிய கோதுமை சாப்பிடும் மாநிலங்களுக்குத்தான் அதைக் கொடுக்கிறார்கள். இதனால் ஏற்படுகின்ற நட்டத்தை டில்லி. சர்க்கார் தான் ஏற்றுக் கொள்கிறது. இந்த நட்டம் மட்டும் 180 கோடி ரூபாய் என்று கணக்கிடப்படுகிறது.

நாமும் கோதுமை சாப்பிடுபவர்களாயிருந்தால் இந்த உதவி கிடைத்திருக்கும். கோதுமை சாப்பிடுகின்ற மாநிலங்களுக்கு உதவி செய்யும் டில்லி சர்க்கார் அரிசி சாப்பிடுகின்ற நமக்கு ஏன் செய்யக் கூடாது?

8 கோடி ரூபாய் நட்டத்தில் ஒரு பகுதியாவது கொடுங்கள் என்றேன். முடியாது என்று சொல்லி விட்டனர். இதைக் கேட்டதும் பஞ்சபாண்டவர் கதைதான் எனக்கு ஞாபகத்திற்கு வந்தது.

இல்லையென்று அவர்கள் கூறினாலும் அதைப்பற்றிக் கவலைப்படாமல் மலிவு விலையில் அரிசி போட முயற்சிகள் எடுத்துள்ளோம்; திட்டமிட்டும் வருகிறோம். விரைவில் நடைமுறைக்கு வந்து விடும்.