பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76


பார்த்தாலே நோய்தீர்க்கும்
மருத்துவமனை

தொழிலாளர் நலன்பேணும் மருத்துவமனைக் கட்டிடங்களை பார்த்தாலே அதனைத் தேடி வருகிற நோயாளிகளுக்கு பாதி நோய் குறைந்துவிடும். நோயாளிகளுக்கு அத்தகைய நம்பிக்கை தருவதாக கண்கவர் வனப்புடன் அவை நிகழ்கின்றன.

நான் எனது இளவயதில் சில மருத்துவமனைகளைப் பார்த்திருக்கிறேன். அதற்குள் போய்விட்டுத் திரும்பினாலே பழைய நோயுடன் புதிய நோய் வந்துவிடும். அவ்வாறின்றி இந்த மருத்துவமனை பொலிவுடன் இருப்பதற்குப் பாராட்டுத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்கு இதுவரை இன்ஷ்யூரன்ஸ் திட்டத்தில் பங்கு பெறும் தொழிலாளருக்கு மட்டும் மருத்துவ உதவி தரப்பட்டது. இனி அவர்களின் குடும்பத்தாருக்கும் மருத்துவ உதவி கிடைக்கும் என்பதறிந்து மகிழ்கிறேன். சென்னை சுற்றுப்புறங்களில் இன்று 7 புதிய மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன. கோவை மதுரை ஆகிய இடங்களிலும் இத்திட்டம் பயனுற நடைபெற்று வருகிறது.

தொழிலாளர் நலன் பேணிக் காப்பதில் தமிழக அரசுக்கு உள்ள தலையான விருப்பம் இவற்றின் மூலம் விளங்கும். தொழிலாளர்களுக்கும் சமூகத்துக்கும் இத்திட்டம் பெரிய வாய்ப்பாக விளங்கும்.

தொழிலாளர்களுக்கு மட்டும் மருத்துவ உதவி தந்து விட்டு அவர்களது குடும்பத்தின் நலிவு நீங்காதிருந்தால் ஒரு பயனும் கிடைக்காது, இந்தப் புதிய திட்டத்தின் மூலம் இது வரை 1 லட்சம் பேருக்கு கிடைத்து வந்த மருத்துவ உதவி தொழிலாளர் குடும்பத்தினரையும் சேர்த்து இனி 6 லட்சம் பேருக்கு கிடைக்கும்.