பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

77


தொழிலாளர் சமூகம் நல்ல பலம் பெற்றால் அவர்கள் ஈடுபட்டுள்ள பணிகளில் மேலும் தெம்போடு உழைப்பார்கள். மனமும் உடலும் மகிழ்ச்சியாக இருந்தால் உற்பத்தியின் அளவு அதிகரிக்கும். செல்வம் வளரும்.

எனவே தொழிலாளர் நலனுக்காக எவ்வளவு செலவிட்டாலும் அது சமூகத்துக்கு ஒன்றுக்கு ஒன்பதாகத் திரும்பி வரும். தொழிலாளருக்காகச் செலவிடப்படும் தொகை ஒரு நாளும் நட்டக் கணக்காகி விடுவதில்லை.

இன்று மனிதனைக் காட்டிலும் திறமையாகப் பணியாற்றும் நவீன கருவிகளைப் பற்றி மத்திய அரசினர் கூறுகிறார்கள், அதையும் மனிதன்தான் செய்தான் என்பதை அவர்கள் மறந்து விடலாகாது.

உணர்ச்சியில் உந்தப்படுபவன் மனிதன். அந்த மனிதன் ஒரு அருமையான இயந்திரம். அவனுடைய இதயத்தில் வலி அவனது கண்களில் கண்ணீர் - அவனது நெஞ்சத்தில் வலி - அவனது உடலில் வாட்டம் காணப்பட்டால் அந்த மனிதயந்திரத்திடமிருந்து முழுப்பயனும் பெறமுடியாது.

அந்த மனிதப் பிறவியின் மாண்பினை உணர்ந்து அவனது வலியினையும் வாட்டத்தையும் போக்கிடக் கிடைத்துள்ள நல்ல வாய்ப்பு இது. அந்த மனிதன் இயந்திரத்தை கவனித்தால் அது உற்பத்திப் பெருக்கத்திற்குத் துணை நிற்கும்.

தமிழகத்து மருத்துவர்கள் நல்ல நிபுணர்கள், தமிழக மருத்துவர்கள் இந்தியாவில் மட்டுமின்றி வெளி நாட்டிலும் தலைசிறந்த மருத்துவர்கள் என்ற பாராட்டைப் பெற்றுள்ளார்கள்.

இந்த மருத்துவமனை பற்றி டாக்டர் குமாரவேல் என்னிடம் விவரம் கூறினார். அழகான கட்டிடம், கருவிகள் உள்ளன, ஆனால் டாக்டர்கள் போதுமான அளவு இல்லை என்றார்.